தூர்வாரும் பணியில் இளைஞர்கள்

2
தூர்வாரும் பணியில் இளைஞர்கள் Lake Pond Cleanup Acitivity in Tamilnadu

 ல்லிக்கட்டு “தை புரட்சி” நடந்ததால், நம்முடைய பண்பாடு மீட்கப்பட்டதோ இல்லையோ நம் தமிழக இளைஞர்களை மீட்டு இருப்பது 100% உண்மை. தூர்வாரும் பணியில் இளைஞர்கள் கலக்கி வருகிறார்கள்.

தூர்வாரும் பணியில் இளைஞர்கள்

ஜனவரி 2017 ல் இருந்து நான் வியப்படையாத வாரமே இல்லை! குறைந்தது ஒரு செய்தியாவது இளைஞர்கள் முன்னெடுக்கும் நிகழ்வுகளைப் பற்றியதாக இருக்கிறது.

இவை 90% எனக்கு மிகவும் பிடித்த, ஆர்வமாகப் படிக்கும் நீர் நிலைகளை மீட்டெடுக்கும் செய்திகளே!

முன்னெல்லாம் நீர் நிலைகளைத் தூர்வாரும் நிகழ்ச்சி பற்றி வருடத்துக்கு இரண்டு செய்திகளைக் காண்பதே அரிது.

ஆனால்,

தற்போது எதைப் பகிர்வது என்று குழம்பும் அளவுக்கு அத்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. Image Credit

தமிழகம் முழுக்கத் தூர்வாரும் பணியில் இளைஞர்கள் 

எங்க பார்த்தாலும் ஏதாவது ஒரு ஊரில், பகுதியில் நீர் நிலைகளை இளைஞர்களே முன்னின்று அரசை நம்பி இராமல் சுத்தம் செய்கிறார்கள்.

இந்தச் செய்திகள் என்னை எவ்வளவு மகிழ்ச்சி அடையச் செய்கிறது என்பதைக் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை 🙂 .

நான் என்னுடைய தள https://www.facebook.com/giriblog ல் இது குறித்த செய்திகளை முன்பு தேடித் தேடி பகிர்வேன் ஆனால்…

தற்போது, அதிகம் பகிர்ந்தால் படிப்பவர்களுக்குச் சலிப்பாகி விடுமோ என்று நினைக்கும் அளவுக்கு நீர் நிலைகளை மீட்கும் செய்திகள் கிடைக்கிறது.

அசத்தும் தன்னார்வலர்கள்

ஊருக்குச் (கோபி) சென்றால், எங்கள் கிராமத்தில் குளம் தூர்வாருகிறார்கள், பல தன்னார்வலர்கள் அமைப்பு ஈரோடு பகுதியில் உள்ள ஏரி குளங்களைத் தூர்வாரி மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.

தன்னார்வலர்கள் அமைப்புகள் அதிகம் இருக்கும் கோவையில் ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அரசாங்கம் ஒத்துழைப்பு அதிகளவில் இல்லை ஆனால், எங்கெல்லாம் சிறப்பான மாவட்ட ஆட்சியர் சரியாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் இளைஞர்களுக்கு மிக உதவியாக உள்ளார்கள்.

இவர்களின் உதவி மூலமே இளைஞர்களும் உற்சாகம் பெறுகிறார்கள். ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அதிகளவில் தன்னார்வலர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார்.

அரசாங்கம் மட்டும் தன்னுடைய கடமையைச் செய்தால், குறைந்தபட்சம் இளைஞர்களுக்கு உதவினால், தமிழகம் செல்லும் பாதையே வேறு.

பூண்டி புழல் ஏரிகள் 

சென்னையில் உள்ள மக்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கும் புழல், பூண்டி ஏரிகளைத் தூர்வார எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்பது எரிச்சலாக உள்ளது.

தண்ணீர் இல்லாமல் உள்ள தற்போதைய நிலையில் தூர்வாரி ஆழப்படுத்த அசத்தலான தருணம் ஆனால், அது பற்றிய எந்த அக்கறையையும் காட்டாமல் அரசு இருக்கிறது.

அனைத்து ஏரி குளங்களையும் அரசு நினைத்தால், வீண் செலவுகளை நிறுத்தி ஆக்ரமிப்புகளை அகற்றி அசத்தலாக மறு சீரமைப்புச் செய்யலாம். அரசுக்கு இது ஒரு கடினமான பணியே அல்ல.

கண் முன்னாடி இப்படியொரு உதவாக்கரை உருப்படாத அரசைக் கண்டு மனம் வெதும்புகிறது. என்னால், இவற்றை ஜீரணிக்கவே முடியவில்லை 🙁 .

இளைஞர்கள் எடுக்கும் முயற்சிகள் மெச்சத்தக்கது

புதுக்கோட்டை புதுக்குளம்

நீங்கள் நம்பினால் நம்புங்கள் தமிழகம் முழுக்க இளைஞர்கள் பல இடங்களில் குளம் ஏரிகளை அரசை நம்பாமல் தங்கள் சொந்த முயற்சியில் சீர் படுத்தி வருகிறார்கள்.

WhatsApp குழு ஏற்படுத்தி நண்பர்களிடையே பணம் வசூல் செய்து, வெளிநாடுகளில் உள்ள அந்த ஊரைச் சேந்தவர்களிடம் உதவி பெற்று இவற்றைச் சீரமைத்து வருகின்றனர்.

பல செய்திகள் மக்களின் பார்வைக்கே வராமல் சென்று விடுகிறது.

இச்செய்திகள் அனைவரிடையேயும் சென்று சேர வேண்டும் அப்போது தான் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு கலந்து கொள்ள ஆர்வமாக முன் வருவார்கள்.

இதைப் படிக்கும் நீங்கள் இளைஞர்கள் முன்னெடுக்கும் நிகழ்ச்சியின் செய்திகளை உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள் அப்போது தான் இது குறித்த ஆர்வமும் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படும்.

தவறுகளை மட்டுமே முன்னிலைப்படுத்தாதீர்கள்

பணம் வசூல் செய்யும் போது எங்காவது சில முறைகேடுகள் நடக்கலாம் ஆனால், தயவுசெய்து அதை மட்டுமே முன்னிலைப்படுத்தி இந்நிகழ்வுகளைச் சிறுமைப்படுத்தாதீர்கள்.

உலகத்தில் அனைவரும் 100% சரியானவர்கள் அல்ல.. எங்காவது சில தவறுகள் நடக்கத்தான் செய்யும் அதையும் கடந்து தான் செல்ல வேண்டும்.

உங்கள் கண்கள் முன்பே பல நல்ல நிகழ்வுகள் நடக்கும் போது தவறுகளைத் தேடிப்பிடித்து அதையே பேசிக்கொண்டு இருக்காதீர்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

Readஎதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

உங்கள் பங்களிப்பை உறுதி செய்யுங்கள்

தமிழகம் முழுக்க நீர் நிலைகள் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டுத் தூர்வாரப்படுகிறது.

உங்களால் முடிந்த அளவுக்கு ஏதாவது ஒரு வகையில் (பணமோ உழைப்போ) உதவுங்கள், அவர்களுக்கு ஆதரவு, உற்சாகம் கொடுங்கள்.

தமிழகத்தின் எதிர்காலம் சிறப்பாகவே உள்ளது. தலைமை சரியில்லாததால் நம்மைப் பின்னே இழுக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் திருடர்களாக இருப்பது கவலையளிக்கிறது.

இப்பிரச்சனை மட்டும் ஓரளவாவது சரியானால் தமிழகம் தொட முடியாத உயரத்துக்குச் செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

என் விருப்பம் எல்லாம் இந்த இளைஞர்கள் தங்களை வருத்தி மீட்டெடுத்த நீர் நிலைகள் வரும் மழைக் காலத்தில் மழையால் நிரம்பும் போது அவர்கள் முகத்தில் காணும் மன நிறைவை மகிழ்ச்சியைக் காண வேண்டும் என்பதே! 🙂 .

வருணபகவான் இளைஞர்களின் உழைப்பை ஆதரிக்காவாவது மழையை அருள வேண்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்

ஏரி குளம் தூர்வாருவது எளிதல்ல

மஞ்சள் பூ மர்மமும் சீமை கருவேல மரமும்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. நம் முன்னோர்களைப் பற்றி படிக்கும் போதெல்லாம் இது உண்மையா இல்ல இவனுங்க படிப்பவர்களின் ஆர்வத்திற்காக இப்படி கத உடுறானுங்களான்னு நான் யோசித்து இருக்கிறேன்.

    காரணம் நம் முன்னோர்அறிவாளிகள் திறமை சாலிகள் நேர்மையானவர்கள் என இப்படி பல கள் பற்றி சொல்லவும் இங்கே நம் அப்பா வோ அண்ணனோ மாமனோ ஏன் நானோ இந்த நாட்டுக்கு உதவா கரை களாக தான் இருக்கிறோம் என்று நான் பல நாள் வேதனை பட்டு இருக்கிறேன்.

    அதிகம் கவலை படும் இடம் அடிக்கடி கவலை படும் இடம் எங்கள் ஊர் ரேஷன் கடை தான் என் கண் எதிரிலேயே அட்டை இல்லாமல் மூட்டை மூட்டையாக அரிசி விற்பார்கள் .

    வாங்குவது எனக்கு நன்கு தெரிந்தவர்களே அப்படி இருக்க நான் எங்க போய் அநியாயத்துக்கு எதிரே பொங்கறதுனு கம்முனு இருந்திட்டேன்.

    இப்ப இளைஞர்கள் குழு குழுவாய் யாரையும் எதிர்பார்க்காமல் அனுமதி கேக்காமல் போராட்டமோ உதவியோ இந்த மாதிரியான மராமத்து பணியோ செய்வது இந்த நாட்டையே தமிழகத்தை ஒரு நாள் ஆச்சரியமா பாக்கும் அளவுக்கு கொண்டு செல்கிறது.

    சமீபத்தில் எங்கள் ஊரில் நடந்த போராட்டம் மதுவுக்கு எதிரானது. அதில் நானும் கலந்துக்கிட்டேன் எல்லாரும் இளைஞர்களே! இதில் முக்கிய விஷயம் என்னன்னா அதில் முக்கால் வாசி பேர் மது குடிப்பவர்கள் நான் உட்பட .

    இருந்தாலும் எங்கள் ஊரில் கடை அமைவது எங்கள் ஊருக்கு நல்லதல்ல என்று நாமும் திருந்துவோம் நாட்டையும் நிறுத்துவோம்னு அன்னிக்கு எல்லோரும் இனி குடிக்க மாட்டோம்னு சத்தியம் பண்ணிட்டு கடைக்கு எதிரே போராட ஆரம்பிச்சோம். எங்களுடைய முதல் போராட்டமே வெற்றி.

    இத டைப் பண்ணும்போதே அப்படியே சிலிர்க்குதுணா.

    அடுத்த போராட்டம் சாத்தனுர் அணையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரா போராட போகிறோம். சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறோம்.

    அந்த காட்டில் மான் குரங்கு காட்டு பன்றி போன்றவை இருக்கிறது. அணையில் நன்னீர் முதலை இருக்கிறது. ஆதலால் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதிக்க சொல்லி போராட்டம் மிக விரைவில் நடக்க இருக்கிறது அண்ணா.

  2. கார்த்தி மிக மகிழ்ச்சியாக உள்ளது. நீயும் இது போன்ற நிகழ்வுகளில் பங்கு பெற்றது பாராட்டத்தக்கது.

    அதிகாரிகள் தலைவர்கள் ஒத்துழைப்பு இருந்தால் இதை விட சிறப்பாகச் செய்யலாம்.

    மென்மேலும் பல சமூக மாற்றத்துக்கான பணிகளை தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!