Adios Amigo (2024 Malayalam) | எதிர்பாரா பயணம்

1
Adios Amigo movie

Road Movie போல ஆனால், கொஞ்சம் மாறுதலுடன் Adios Amigo. Image Credit

Adios Amigo

எதிர்பாராதவிதமாகச் சந்தித்துக்கொள்ளும் இருவரின் பயணம் Adios Amigo.

பயணத்தில் ஆர்வம் கொண்ட ஆசிஃப் அலி, தான் சந்திக்கும் சுராஜை தனது பயணத்தில் இழுத்துக்கொள்கிறார்.

இருவரது பயணத்திலும் (கேரளாவுக்குள்) பல்வேறு அனுபவங்கள். அதைச் சுவாரசியமாகக் கொடுத்துள்ளார்கள்.

பயணம்

Road Movie எனப்படும் பயணக்கதை பலருக்கு விருப்பமானது, பெரும்பாலும் இப்படங்களில் புதுவிதமான அனுபவங்களாக இருக்கும்.

கோபம், சண்டை, த்ரில்லர் என்று அனைத்தும் கலந்து இருக்கும்.

இப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. மிகப்பெரிய பணக்கார வீட்டு நபரான ஆசிஃப் அலி சரக்கடித்துக்கொண்டே ஊர் சுற்றுபவர்.

பணக்காரராக இருந்தாலும், அவர் பயன்படுத்துவது பேருந்து, ஆட்டோ, ரயில் போன்ற பொதுத்துறை வாகனங்கள் தான்.

அம்மாவின் மருத்துவச் செலவுக்காக நண்பனிடம் கடன் கேட்டு இருந்த நிலையில், அவர் கூறும் இடத்துக்கு சுராஜ் வருவார். இங்கே தான் இருவரும் சந்திப்பார்கள்.

ஆசிஃப் அலி பணம் வைத்து இருப்பதாலும், உதவும் மனப்பான்மை கொண்டவராக இருப்பதாலும், தனக்கும் உதவுவார் என்ற எண்ணத்தில் அவருடன் பயணிக்கிறார்.

சுராஜுக்கு பணம் தேவையென்றாலும் திருடனல்ல, மனசாட்சியுடன் நடப்பவர்.

ஆசிஃப் அலி பணம் கொடுப்பது போல இருக்கும் ஆனால், ஏதாவது காரணத்தால் முடியாது. இப்படியே சென்று கொண்டு இருக்க, சுராஜுக்கு நெருக்கடியாகும்.

இதன் பிறகு என்ன ஆனது? என்பதே கதை.

குடி

யப்பா! எப்படா குடியை ஆசிஃப் அலி நிறுத்துவார் என்றாகி விட்டது. படத்திலேயே மிகவும் கடுப்பாக இருந்த ஒரே விஷயம் இது தான்.

இவர் குடிப்பதும் இல்லாமல் சுராஜையும் சேர்த்து இழுத்து குடிக்க வைத்து.. உஸ்ஸ் முடியல்ல்ல. என்ன தான் அப்படியான கதாப்பாத்திரம் என்றாலும் ரொம்ப அதிகம்.

ஜாலியான நபர் என்றாலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இப்படி திரிந்து கொண்டு இருப்பாரா?! என்ற சந்தேகத்தை அளிக்கிறது.

அதுவும் குடித்துவிட்டு எங்கே கிடக்கிறோம் என்பதே தெரியாத அளவுக்கு.

பேருந்தில் தன்னை மிரட்டிய நபரை அதே பாணியில் மிரட்டி அவரைக் கலாய்த்து இருப்பது செம 🙂 . மிரட்டியவரின் உடல்மொழி சிரிப்பை வரவழைத்தது.

புது வசதியை சுராஜ் அனுபவிக்கும் போது திடீரென்று பறிக்கப்பட்டது போல ஆனதும், அவரின் நடவடிக்கைகள், முக பாவனைகள் சிறப்பு 🙂 .

அம்மாக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இப்படிச் சுற்றிக்கொண்டு இருக்க முடியுமா? என்ற கேள்வியும் வருகிறது. அதை ஆசிஃப் அலியும் கேட்பார்.

ஒளிப்பதிவு பின்னணி

கேரளாவின் பல இடங்களைச் சுற்றிக்காட்டி விட்டார்கள். அதோடு இதில் பார்த்தால், கேரளா வேறு லெவலில் உள்ளது.

சிங்கப்பூர் போல தாழ் தள பேருந்து (சென்னையிலும் வந்துள்ளது), பயண இடங்கள் என்று எல்லாமே அற்புதமாக உள்ளது.

இசை சிறப்பாகத் தோன்றவில்லை, அதோடு இது ஒளிப்பதிவுக்கான படம்.

யார் பார்க்கலாம்?

பயணக்கதைகளை ரசிப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். குடி மட்டுமே எரிச்சலாக உள்ளது.

ஆகச்சிறந்த படமில்லை ஆனால், புது அனுபவமாகவும், பலரின் மன எண்ணவோட்டங்களையும், உதவும் குணத்தையும் காண வாய்ப்பாகவும் இருக்கும்.

சிலர் காட்சியிலேயே இல்லை, தொலைபேசியிலேயே துவக்கத்திலிருந்து இறுதி வரை வந்து சென்றாலும் அவர்களின் அனுசரணை தெரியும்.

இறுதிக்காட்சி உணர்ச்சிகரமாகவும், எதிர்பாராததாகவும் இருந்தது. வழக்கமான படங்களிலிருந்து மாறுதலாக Adios Amigo இருக்கும்.

பரிந்துரைத்தது ஸ்ரீனிவாசன். NETFLIX ல் காணலாம்.

Directed by Nahas Nazar
Written by Thankam
Produced by Ashiq Usman
Starring Asif Ali, Suraj Venjaramoodu
Cinematography Jimshi Khalid
Edited by Nishadh Yusuf
Music by
Songs Gopi Sundar, Jakes Bejoy
Score Jakes Bejoy,
Release date 9 August 2024
Country India
Language Malayalam

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

1 COMMENT

  1. கிரி, இந்த படத்தை பற்றி இது வரை எந்த தகவலும் எனக்கு தெரியாது.. ஆனால் இந்த இரண்டு நடிகரையும் எனக்கு பிடிக்கும்.. குறிப்பாக நான் பார்த்த சில ஆசிப் அலியின் படங்கள் விரும்ப தக்க வகையில் இருந்துள்ளது.. சுராஜின் நடிப்பில் டிரைவிங் லைசென்ஸ் மிகவும் பிடித்த படம்.. குறிப்பாக இரண்டாம் பகுதியில்..

    கடந்த சில மாதமாக எந்த மலையாள படமும் பார்க்கவில்லை.. மலையாளத்தில் பெரும்பான்மை படங்களில் குடியை ரொம்ப இயல்பாக காண்பிப்பார்கள்.. அதை ஒரு கௌரவமாகவும் கருதுவது தான் இன்னும் கொடுமை.. வாய்ப்பு இருக்கும் போது நிச்சயம் இந்த படத்தை பார்க்கிறேன்.. லப்பர் பந்து படம் பார்த்து பிடித்து இருந்தால் எழுதவும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!