US Return சாத்தியமா?

5
US return

மெரிக்க வாழ்க்கையிலிருந்து விலகித் திரும்ப இந்தியாக்கே வர முடியுமா என்பதை US Return கட்டுரை கூறுகிறது. Image Credit

அமெரிக்கா

பெரும்பாலானவர்களுக்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது நோக்கமாக இருக்கும். அமெரிக்கா ஒரு கனவு தேசம்.

இதற்கு இங்குள்ள மேம்பட்ட வாழ்க்கை, வாய்ப்புகள், கிடைக்கும் அதிக ஊதியம், சிறப்பான உட்கட்டமைப்பு உட்படப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

எனவே, பலரும் இங்கேயே சென்று குடியேற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

எனக்கும் அமெரிக்கா ஒருமுறையாவது சென்று விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. காரணம், அங்குள்ள உட்கட்டமைப்பு, சாலைகளை, வித்தியாசமான பகுதிகளைக்காண.

தற்போது கால மாற்றத்தில், அமெரிக்காவும் விமர்சனத்துக்குள்ளாகி விட்டது என்றாலும், இக்கட்டுரை அமெரிக்கா சரியா தவறா என்பது பற்றியல்ல, மாறாக அங்கே வசித்தவர்கள் திரும்ப முடியுமா என்பதைப் பற்றி.

US Return

வெளிநாடு சென்று பல காலமாக இருந்தவர்கள், பெரும்பாலும் இந்தியா திரும்ப வர விரும்புவதில்லை. அமெரிக்கா என்றில்லை எந்த வளர்ந்த நாடாக இருந்தாலும்.

அது அமெரிக்கா எனும் போது இன்னும் கடினமாகிறது.

திரும்ப வந்தவர்களும் விசா தொடராதது, பணி மாற்றம் உட்பட வேறு வழியில்லாத காரணங்களாலே! விருப்பப்பட்டு அல்ல.

பணிக்காக அமெரிக்கா சென்று பல காலமாக வாழ்ந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே எனக்குத்தெரிந்து அவர்களாக முடிவெடுத்து இதுவரை திரும்பியுள்ளனர்.

முதல் நபர்

கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் இருந்து இருப்பார் என்று நினைக்கிறேன். தனது மகளின் படிப்புக்காக இந்தியா திரும்பி விட்டார். இது நடந்தது 2016 ஆக இருக்கலாம்.

இரண்டாம் நபர்

தனது பெற்றோர் மற்றும் மனைவியின் பெற்றோருக்கு வயதாகிறது, அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால், திரும்பியவர்.

பின்னர், அமெரிக்காவுக்கே திரும்பச் செல்லலாம், தெரியாது.

மூன்றாம் நபர்

2012 ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பியவர், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். தற்போது இந்தியாவில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

இவர் தான் இக்கட்டுரை எழுதக்காரணமாக இருந்தவர்.

ஒத்த எண்ண அலைவரிசை

இவர் எனக்கு முன்பு அறிமுகம் கிடையாது, திருமண நிகழ்வில் அறிமுகமானார்.

இருவரும் பரஸ்பரம் விசாரித்த பிறகு இவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியவர் என்றதுடன் எனக்கு ஆர்வமானது.

எதனால் இந்தியா வந்தார்? எப்படி வர முடிந்தது? எப்படி மனைவி ஒத்துக்கொண்டார்? அமெரிக்கக் குடியுரிமை பெற்றும் எப்படி வந்தார்?

என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்தேன். அதோடு நானும் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளேன் என்பதாலும், அவர் எண்ண அலைவரிசையை ஒத்து இருந்ததால், அவரும் ஆர்வமாகப் பேசினார்.

நான் செய்த, செய்ய நினைத்தவற்றை அவர் செய்து கொண்டு இருந்ததே உரையாடலின் நேரத்தை அதிகப்படுத்தியது.

அமெரிக்கக் குடியுரிமை

எனக்கு Geo Politics ல் அதிக ஆர்வம் என்பதால், அமெரிக்கா பற்றியும் பல தகவல்களைக் கூறியதால், அவரும் ஆர்வமாகப் பல்வேறு தகவல்களைக் கூறினார்.

அமெரிக்கக் குடியுரிமை பெற வேண்டும் என்றால், அங்குள்ள சட்ட திட்டங்களை, அரசியலைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்பதால், இதுவரை மற்றவர்கள் கூறாத பல்வேறு தகவல்களைக் கூறினார்.

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் இந்தியா வந்ததால் வாக்களிக்க முடியாது (OCI) என்ற ஒன்றைத்தவிர அனைத்தையும் செய்ய முடியும்.

திட்டமிடல்

கிட்டத்தட்ட பக்காவாக அனைத்தையும் திட்டமிட்டுச் செய்துள்ளார்.

பெருமைக்காகவும், பணம் உள்ளது என்பதற்காகவும் செலவுகளைச் செய்யாமல் தேவையானவற்றுக்கு மட்டுமே செய்துள்ளார்.

குறிப்பாக எந்த ஒரு சேவையையும் முழுமையாகப் பயன்படுத்தி, அதன் மூலம் எப்படிச் செலவைத் தவிர்க்கலாம் என்பது வரை யோசித்துச் செய்கிறார்.

மற்ற தகவல்கள், தனிப்பட்ட தகவல்களாக, விவரங்களாக இருப்பதால், பொதுவில் கூறுவது (Privacy) சரியல்ல என்பதால் தவிர்க்கிறேன்.

அவர் கூறியதில் மையக்கருத்தை மட்டும் கூறுகிறேன்.

US Return சாத்தியமா?

எளிதல்ல என்பதே உண்மை.

Bye Bye சிங்கப்பூர் கட்டுரையில் கூறியுள்ளதையே அவரும் கிட்டத்தட்ட கூறினார்.

பலருக்கும் இந்தியாக்கும் செல்ல வேண்டும் ஆனால், அமெரிக்கச் சொகுசு வாழ்க்கையையும் விட முடியவில்லை என்ற குழப்பத்திலேயே உள்ளார்கள்.

எனவே, உடலால் அமெரிக்காவிலும் உள்ளத்தால் இந்தியாவிலும் வாழ்கிறார்கள்.

சிக்கல்

  • இருப்பதிலேயே மிகப்பெரிய பிரச்சனை பெரும்பாலும் ஒப்பீட்டளவில் கணவர்கள் ஒப்புக்கொண்டாலும், மனைவிகள் இந்தியாக்கு திரும்ப ஒப்புக்கொள்வதில்லை.
  • காரணம், சொந்தக்காரர்கள் தொல்லை, பொறுப்புகள், தனியுரிமை (Privacy) போவது, திருமணம், விழாக்கள் என்று நெருக்கடிகள்.
  • இந்தியா வந்தால் லஞ்சம், மோசமான உட்கட்டமைப்பு, ஒழுங்கற்ற போக்குவரத்து முறை போன்ற வழக்கமான குற்றச்சாட்டுகள்.
  • அமெரிக்காவில் கிடைக்கும் ஊதியம் இந்தியாவில் கிடைக்காது.

மேற்கூறியதே, இந்தியா திரும்ப யோசிக்க, மறுக்கும் காரணங்கள்.

வேறு யார் வந்தார்கள்?

இந்தியா வந்த பிறகு ஒருநாள் கூட அமெரிக்காவை விட்டு ஏன் வந்தோம் என்று நினைத்ததில்லை‘ என்று கூறினார்.

இவர் வந்ததைப் பார்த்து இவரது நண்பரொருவர் இந்தியாக்கே திரும்பியுள்ளார் ஆனால், ஓரிரு வருடங்கள் சமாளித்தும் முடியாமல், திரும்ப அமெரிக்காவே சென்று விட்டதாகக் கூறினார்.

இது பற்றிக் குறிப்பிடும் போது,

இந்தியா செல்வதா? அமெரிக்காவிலேயே இருப்பதா? என்ற குழப்பத்தில் இருப்பவர்கள் இது போன்று வந்து பார்த்து, முடியவில்லை என்றால் திரும்ப அங்கேயே சென்று விடலாம்.

குறைந்த பட்சம் குழப்பத்திலேயே வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஒரு தெளிவாவது கிடைக்கும்.

இது போல வந்து சென்றவர் தற்போது தெளிவாக நம் வாழ்க்கை அமெரிக்கா தான் என்பதை முடிவு செய்து, குழப்பத்திலிருந்து விடுபட்டதாகக் கூறினார்‘.

இவ்வாறு அனைவராலும் வந்து செல்ல முடியாது காரணம், பணிச்சூழல், வயது, திரும்ப அனைத்தையும் மாற்றுவது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது.

குறிப்பாகக் குழந்தைகள் படிப்பு.

இது போன்று சிலர் இந்தியா வந்து திரும்ப அமெரிக்காவே சென்று விட்டதாகக் கூறினார்.

முடிவு எடுப்பது

Bye Bye சிங்கப்பூர் கட்டுரையில் கூறி இருந்தது போல, உணர்ச்சிவசப்பட்டு US Return முடிவு செய்ய வேண்டாம்.

சமாளிக்க முடியுமா? இந்திய வாழ்க்கை திரும்பப் பொருந்துமா? குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? என்பதைத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் தானே வளர்ந்தார்கள் அவர்களால் திரும்ப வர முடியாதா?! என்ற சிறுபிள்ளைத்தனமான சிந்தனை மற்றவர்களுக்கு வேண்டாம்.

அவ்வாறு நினைப்பவர்கள் பலர் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்தவர்கள் தான். இவர்கள் இன்னொரு நாட்டுக்குச் சென்றுள்ளார்கள், அவ்வளவே.

நகரத்தில் பழகியவர்களால் கிராமத்துக்கு எப்படிச் செல்ல முடிவதில்லையோ, கிராமத்தைப் பார்த்து ஏக்கப்படுகிறார்களோ அதே தான் இவர்களுக்கும்.

இந்தியாக்கே வரலாம்

இது ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்காலத்தில் அமெரிக்கா மட்டுமல்லாது மற்ற நாடுகளில் உள்ளவர்களும் இந்தியாக்கே திரும்புவார்கள் என்பதே என் கணிப்பு.

காரணம், மேற்கத்திய நாடுகளின் பல்வேறு பொருளாதார, சமூக காரணங்கள். அமெரிக்காவில் Green Card கிடைப்பதும் இனி எளிதல்ல என்ற நிலையுள்ளது.

எங்கே வேண்டும் என்றாலும் வசிக்கலாம் தவறில்லை ஆனால், அங்கே வசிப்பதாலேயே இந்தியாவை இழிவாகப் பேசுவதை மட்டும் செய்ய வேண்டாம்.

கொசுறு

வாழ்க்கையில் ஓரிரு தைரியமான முடிவுகளை எடுத்துள்ளேன்.

அதில் இந்தியாவே திரும்ப வேண்டும் என்ற என் முடிவு நான் எடுத்த முடிவுகளில் சிறந்த ஒன்றாக இன்று வரை கருதுகிறேன்.

இன்னொன்று கடனைக்கட்ட வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முடிவு 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. கிரி.. கிட்டத்திட்ட நம்ம ரெண்டு பேரும் ஒரே பாதையில் தான் பயணித்து வந்ததாக உணர்கிறேன். காரணம் படிப்பை முடித்த பிறகு கோவை, திண்டுக்கல் என நான் பணிக்காக சென்றேன்.. இந்த தருணத்தில் நீங்கள் சென்னையில் இருந்தீர்கள்..

    அதன் பிறகு 2007 இறுதியில் நான் UAE க்கு வந்த போது, நீங்கள் சிங்கப்பூர் சென்று விட்டீர்கள். 2015 அக்டோபர் மாதம் நீங்கள் இந்தியா திரும்பி சென்று விட்டீர்கள்.. ஆனால் நான் இன்னும் இங்கு தான் இருக்கிறேன்..

    ஆரம்பத்தில் அரசு பணியில் தான் சேர வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இருந்தது.. ஆனால் காலம் என்னை வேறு திசையில் பயணிக்க வைத்து விட்டது.. கடந்த முறை ஊருக்கு வந்த போது 19 வருடம் கழித்து சில கல்லூரி நண்பர்களை சந்திக்கும் போது,

    ஒரு சிலர் அரசு பணியில் இருப்பதாக சொன்ன போது மனதிற்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது.. காரணம் படிக்கும் போது வகுப்பில் நானும், கனகலிங்கம் இருவர் மட்டுமே அரசு பணிக்காக தனியாக எங்களை தயார் செய்தோம். தற்போது கனகலிங்கம் அரசு பணியில் உள்ளார்..

    படித்து முடித்த பிறகு தான் வாழ்க்கையின் சூழலே புரிந்தது.. தாத்தா / பாட்டி, அம்மா அரவணைப்பில் வளர்ந்ததால் நிறைய சம்பாரித்து அவர்கள் கையில் கொடுக்க வேண்டும் என்ற ஒற்றை ஆசை மட்டும் இருந்தது. கல்லூரி படிக்கும் போதே பாட்டி இறந்து விட்டார்கள்.. அவர்கள் உயிரோடு இருந்த வரை என்னால் ஒரு ரூபாய் கூட சம்பாரித்து கொடுக்க முடியவில்லை..

    ஆனால் தாத்தாவின் இறுதி காலம் வரை (2015 இறக்கும் வரை) நான் நினைத்தைவிட அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.. 30 / 40 வருடங்களுக்கு மேல் வாடகை வீட்டில் வசித்து வந்த அம்மாவின் ஒரே கனவு சொந்த வீடு. அவரின் திருப்திக்காக சொந்த வீடு 2015 இல் கட்டி முடித்தோம்..

    தற்போது எந்த கடனும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்.. ஒரு வகையில் யோசித்து பார்த்தால் வெளிநாட்டு வாழ்க்கை நல்லதா? கெட்டதா? என்றெல்லாம் தெரியவில்லை.. அது அவரவர் சூழ்நிலையை பொறுத்தது..

    நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் நினைத்ததை எல்லாம் என்னால் செய்ய முடிந்தது..அதற்கு காரணம் இந்த வெளிநாட்டு வாழ்க்கை தான்.. என்றாவது ஒரு நாள் தாய்நாட்டிற்கு சென்று தான் ஆக வேண்டும் அதில் எந்த மாற்றமும் இல்லை..

    ரொம்ப வருடமாக இருப்பதால் இங்கு நட்பு வட்டம், கிரிக்கெட், பாட்மிண்டன் எல்லாம் ஒரு செட்டப்பாக இருப்பதால் இவற்றை விட்டு என்னால் வெளியில் வருவது கேள்வியாக இருக்கிறது.. விளையாட்டில்லாத ஒரு வாழ்க்கையை என்னால் கனவிலும் நினைத்து பார்க்க முடியவில்லை..

    காரணம் 25 தமிழ் நண்பர்கள் மட்டும் (இந்து / முஸ்லீம்) ஒரு குழுவாக 14 ஆண்டுகளுக்கு மேல் வயது வித்தியாசம் பாராமல் கிரிக்கெட் விளையாடி வருகிறோம். இத்தனை வருடங்கள் வேறு யாரும் விளையாடுகிறார்களா? என்று தெரியவில்லை.. கிரிக்கெட்டை தாண்டி ஜாதி மதம் பாராமல், நட்பு, உறவு, பாசம், கோபம், உதவி என ஒரு இணக்கம் இங்கு இருக்கிறது..

    ஊருக்கு விடுமுறையில் வரும் போது கூட விளையாட முடியமால் இருப்பது ஒரு வித ஏமாற்றத்தை தரும்..40 வயதை தாண்டியும் விளையாட்டின் மீது காதல் அதிகமாக இருக்கிறது.. நிச்சயம் முடிந்து மனைவியிடம் முதன் முதலில் பேசும் போது, அவங்க உங்களுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்? என்னோட பதில் : எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்.. அவங்க REPLY : அந்த கருமத்தை (கிரிக்கெட்டை) நினைச்சாலே எனக்கு கடுப்பு வரும்..

  2. @ஹரிஷ் நன்றி

    @யாசின்

    “2007 இறுதியில் நான் UAE க்கு வந்த போது, நீங்கள் சிங்கப்பூர் சென்று விட்டீர்கள். 2015 அக்டோபர் மாதம் நீங்கள் இந்தியா திரும்பி சென்று விட்டீர்கள்.. ஆனால் நான் இன்னும் இங்கு தான் இருக்கிறேன்..”

    ஆமாம் 🙂 .

    “ஆரம்பத்தில் அரசு பணியில் தான் சேர வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு இருந்தது.. ”

    எனக்கு அப்படியொரு எண்ணம் இல்லை காரணம் , அதற்கான விழிப்புணர்வு இல்லை .

    விழிப்புணர்வு வந்த பிறகு ரயில்வேயில் சேர விருப்பட்டேன் ஆனால் , முடியவில்லை . சேரலாம் என்று நினைக்கும் போது வயது கடந்து விட்டது.

    “தாத்தாவின் இறுதி காலம் வரை (2015 இறக்கும் வரை) நான் நினைத்தைவிட அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.. 30 / 40 வருடங்களுக்கு மேல் வாடகை வீட்டில் வசித்து வந்த அம்மாவின் ஒரே கனவு சொந்த வீடு. அவரின் திருப்திக்காக சொந்த வீடு 2015 இல் கட்டி முடித்தோம்.”

    இதெல்லாம் நீங்கள் வெளிநாடு சென்றதால் சாத்தியமானது.

    “ரொம்ப வருடமாக இருப்பதால் இங்கு நட்பு வட்டம், கிரிக்கெட், பாட்மிண்டன் எல்லாம் ஒரு செட்டப்பாக இருப்பதால் இவற்றை விட்டு என்னால் வெளியில் வருவது கேள்வியாக இருக்கிறது”

    இதற்காக வராமல் இருப்பது சரியாக இல்லை .. குடும்பஸ்தனாக வேறு முக்கியக் காரணங்கள் இருப்பின் சரி.

    “அவங்க உங்களுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்? என்னோட பதில் : எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும்.. அவங்க REPLY : அந்த கருமத்தை (கிரிக்கெட்டை) நினைச்சாலே எனக்கு கடுப்பு வரும்..”

    🙂 இதை வைத்து ஒரு கட்டுரை எழுத திட்டமிட்டுள்ளேன்.

    இது போன்ற சம்பவம் இன்று சமீபத்தில் நடந்தது எனவே, இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். தற்போது நீங்களும் கூறி உள்ளீர்கள்.

    நீங்கள் ஏற்கனவே கூறியதும் நினைவில் உள்ளது.

  3. அமெரிக்காவை விடுங்க.

    நான் இந்த பெங்களூரு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது.
    2018ல் கோவிட்டுக்கு முன் தமிழ்நாட்டிற்கு சென்றேன். இன்னும் தமிழ்நாட்டிற்கே செல்ல முடியாமல் டிராப்பில் சிக்குண்டதைப் போல் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம்.
    இங்கேயேயும் ஒரு வித தனிமையை சமீப காலங்களில் உணர்கிறேன்.
    தமிழ்நாட்டிற்கு சென்றால் அதை விட மோசமாக தனிமையை உணர்வேன். அந்தப் பயம் தான் காரணம்.

  4. @தமிழ்நெஞ்சம்

    இதைத்தான் நகரத்துக்குச் செல்பவர்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

    எந்த ஊராக இருந்தாலும் ரொம்ப காலமாக இருக்கும் போது அந்த இடத்துக்குப் பொருந்தி விடுவோம், மாறி வருவது கடினமான செயலே.

    தனிமை என்று எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. திரைப்படம், பாடல்கள், Blog எனக்கு தனிமையை உணரச்செய்வதில்லை.

    எங்கே இருந்தாலும் அங்கே நண்பர்கள் இருப்பார்கள். அதனால் எப்படியவாது நேரம் சென்று விடும் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!