லப்பர் பந்து (2024) | மாமா Vs மாப்பிள்ளை

2
லப்பர் பந்து

காதலையும் கிரிக்கெட்டையும் மையமாக வைத்து வந்துள்ள படமே லப்பர் பந்து.

லப்பர் பந்து

தினேஷ் பல காலமாக கிரிக்கெட் விளையாடுபவர், அவரின் குறை தெரிந்து அவரை ஆட்டமிழக்கச் செய்த ஹரிஷ் கல்யாணோடு சண்டையாகிறது. Image Credit

ஹரிஷ் கல்யாண் காதலிக்கும் பெண், தினேஷ் மகள் என்றதும் மேலும் சிக்கலாகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதைச் சுவாரசியமாகக் கூறியதே லப்பர் பந்து.

நடிகர்கள் தேர்வு

இது போன்ற நடுத்தர வயது கதாப்பாத்திரத்தில் தினேஷ் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இதுவே ரொம்ப படங்களுக்குப் பிறகு இவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தந்துள்ளது.

தினேஷ் மனைவியாக வரும் ஸ்வாசிகா கோபமான மற்றும் முரட்டு பெண்ணாக நடித்துள்ளார், இயல்பாக இல்லை, வலிந்து திணிக்கப்பட்ட நடிப்பாக இருந்தது.

அதற்கு அந்தக்கதாபாத்திரத்துக்கு உண்டான தோற்றம் இல்லாதது காரணமாக இருக்கலாம். அதோடு இருவரது வயதும் குறைவு ஆனால், நடுத்தர வயது கதை.

ஹரிஷ் கல்யாண் பக்காவான தேர்வு, இவருடைய இயல்பான நடிப்பு பொறியாளன் படத்திலிருந்து ரொம்பப்பிடிக்கும். நடுத்தரக் குடும்பத்துப் பையன் போன்ற தோற்றம்.

நாயகி சஞ்சனாவை எங்கேயோ பார்த்த மாதிரியே உள்ளதே என்று யோசித்துக்கொண்டே இருந்து, பின்னர் நடிகை ஸ்வர்ணமால்யா போல இருக்கிறார் என்று நினைவுக்கு வந்தது 🙂 .

ஹரிஷ் கல்யாண் நண்பராக வரும் பாலா இது போன்ற கதாபாத்திரத்தில் சிறப்பாகச் செய்வார், அதே போல தினேஷ் நண்பராக வருபவரும் ஆகச்சிறந்த நடிப்பு.

குறிப்பாக தினேஷ் இறுதியில் சரியாக விளையாடாமல் பின்னர் அதிரடியாக ஆடும் போது அவரின் முகத்தில் தெரியும் பெருமை, நடிப்பு போலவே இல்லை.

ஈகோ & சாதி

கதையின் மையமே பார்க்கிங் படம் போல ஈகோ தான். இதோடு சாதிப்பிரச்சினையால் ஏற்படும் புறக்கணிப்பைக் கூறியுள்ளார் இயக்குநர்.

ரஞ்சித், மாரி கூறுவதையே லப்பர் பந்து இயக்குநரும் கூறியுள்ளார் ஆனால், நேர்மறையாக, கதையின் போக்கில், திணிக்காமல் கூறியுள்ளார்.

ரஞ்சித், மாரி இருவரும் படம் பார்ப்பவர்களிடையே வெறுப்புணர்வை, எதிர்மறை எண்ணங்களை, சண்டையைக் கொண்டு வந்து விடுகிறார்கள்.

ஆனால், இதில் யாருக்குமே வெறுப்புணர்வு தோன்ற வைக்காமல் அதே சமயம் சொல்ல வந்த கருத்தையும் கூறி இருக்கிறார் இயக்குநர்.

சாதியோடு பெண் சுதந்திரம், முக்கியத்துவத்தையும் கொண்டு வந்துள்ளார் ஆனால், இது அனைத்துமே கதையோட்டத்தில் இயல்பாகச் செல்கிறது.

ஈகோ, கோபம், நகைச்சுவை, பரபரப்பு, சண்டை, போட்டி, காதல், பாசம் என்று கலந்து கட்டி அடித்துள்ளார்கள்.

கிரிக்கெட்

சென்னை 600028 படத்துக்குப் பிறகு கிரிக்கெட்டை மையமாக வைத்துக் கதையமைத்த படங்களில் நிச்சயம் லப்பர் பந்து முக்கியமான படமாக இருக்கும்.

தினேஷ் வரும் போதெல்லாம் விஜயகாந்த் பாடலைப் போட்டுக் கலக்கியுள்ளார்கள். கேப்டன் ரசிகரான தினேஷ் வீடு முழுக்க கேப்டன் படங்கள்.

போட்டியில் மரண அடி அடிக்கும் போது மட்டையைச் சுழற்றி கெத்து காட்டுகிறார், தினேஷ் பெயரும் கெத்து 🙂 .

இறுதிப்போட்டி செம பரபரப்பாக உள்ளது. படம் பார்ப்பவர்கள் விளையாட்டரங்கில் பார்ப்பது போல ஆர்ப்பரிக்கிறார்கள். பரபரப்பான போட்டியைப் பார்த்த உணர்வு.

இதில் வரும் ட்விஸ்டை ஊகிக்க முடிந்தாலும், சுவாரசியமாக இருந்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்.

போட்டியை வர்ணனை செய்பவரும், தினேஷ் நண்பர்கள் பாலாவை கலாய்ப்பதும் அப்படியே கிராமத்துக் குசும்பு.

ஒளிப்பதிவு இசை

ஒளிப்பதிவு செமையாக உள்ளது. எங்கேயுமே செயற்கை உணர்வு வராத அளவுக்கு அற்புதமாக எடுத்துள்ளார்கள்.

போட்டியைக் காண்பவர்கள் எண்ணிக்கை அதிகமில்லை என்றாலும், ஆரவாரமான போட்டியாகக் காண்பித்து இருப்பது சிறப்பு.

பாடல்களை முன்பு கேட்கவில்லையென்பதால், எதுவும் கூற முடியவில்லை. பின்னணி இசை சிறப்பாக இருந்தது.

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம்.

இறுதியில் எது வெற்றி? என்பதை அழகாகக் கூறியுள்ளார்கள்.

கூற வேண்டிய கருத்தைக் கூறினாலும், இடது சாரி மனநிலையில் படத்தைத் திணிக்காததே பலரும் இப்படத்தை ரசிக்கக் காரணம்.

Directed by Tamizharasan Pachamuthu
Written by Tamizharasan Pachamuthu
Produced by S Lakshman Kumar, A. Venkatesh
Starring Harish Kalyan, Attakathi Dinesh, Swasika, Sanjana Krishnamoorthy
Cinematography Dinesh Purushothaman
Edited by Madan Ganesh
Music by Sean Roldan
Release date 20 September 2024
Country India
Language Tamil

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. கிரி.. இந்த படத்தை நானும் பார்த்தேன்.. படத்தில் வரும் காட்சிகள் என்னை 25 வருடம் அப்படியே பின்னோக்கி பயணப்பட வைத்தது.. காரணம் சிறு வயதில் அதிகம் விளையாடிய ஒரே விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே. கிரிக்கெட் தவிர்த்து புறா வளர்ப்பு, காத்தாடி விடுதல், மீன் பிடிப்பது, bigfun ஸ்கோர் அட்டை, கோலிக்குண்டு, படம் விளையாட்டு என இன்னும் பல பொழுது போக்கு விளையாட்டுகள் இருந்தாலும் முதலிடம் கிரிக்கெட் மட்டும் தான்..

    ஒரு வேக பந்து வீச்சாளராக தான் முதலில் கிரிக்கெட்டை விளையாட ஆரம்பித்தேன். பேட்டிங் மீது துளியும் ஆர்வம் இல்லை.. கல்லுரி படிக்கும் போது பேட்டிங் துவக்க வீரராக (மெதுவாக விளையாட வேண்டி) ஆடினேன்.. இங்கு வந்த போது அதிரடி வீரராக மாறி விட்டேன்.. ஆனால் என்றைக்கும் பிடித்தது வேக பந்து வீச்சு தான்..

    bolwed எடுத்து ஸ்டம்ப் பறக்கும் போது ஒரு பீலிங் வரும்.. எல்லா பந்து வீச்சாளர்களும் அதை விரும்புவார்கள். தற்போது வயதின் காரணமாக வேகமாக வீச முடிவதில்லை. இரண்டு நடிகர்களும் நன்றாக நடித்து இருந்தாலும், தினேஷ் மிகவும் சிறப்பாக தன் பாத்திரத்தை செய்ததாக உணர்கிறேன்..

    குறிப்பாக அழுத்தமான காட்சிகளில் தினேஷ் நன்றாக நடித்து இருக்கிறார்.. நீங்கள் குறிப்பிட்டது போல் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது.. குறிப்பாக மக்கள் நெருக்கம் உள்ள இடத்திலும் இயல்பாக காட்சிப்படுத்தி உள்ளார்கள்.. கதைக்களம் பெரம்பலூர் / தொழுதூர் பகுதில் எடுத்து இருப்பதால் almost எங்கள் ஊரில் நினைவுகள் வந்து போனது..

  2. @யாசின்

    இப்படம் பார்க்கும் போது உங்கள் நினைவு பல இடங்களில் வந்தது. அதோடு ஒரு சில வசனங்களுக்கும் நீங்கள் அவ்வப்போது கூறியது நினைவுக்கு வந்து சென்றது.

    விமர்சனத்திலேயே குறிப்பிட நினைத்தேன், பின்னர் வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!