Aadujeevitham (2024 Malayalam) | பாலைவன வாழ்க்கை

2
Aadujeevitham

ண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து Aadujeevitham எடுக்கப்பட்டுள்ளது.

Aadujeevitham

கேரளாவின் சம்பிரதாயமான வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பலரில் ஒருவராக தரகர் மூலம் சவூதி அரேபியா செல்கிறார் பிரித்விராஜ் இவருடன் இன்னொருவரும்.

சவூதி அரேபியா சென்றதும் இவர்களை அழைத்துச் செல்ல வேண்டியவர் வந்து இருவரையும் அவர்கள் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். Image Credit

இவர்கள் சென்றது வேறு வேலைக்கு ஆனால், ஆடுகளை மேய்க்கும் இடமாக உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாலைவன மணலாக உள்ளது.

இங்கே மாட்டிக்கொண்டவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

பாலைவனம்

பாலைவனம் சார்ந்த படங்களைப் பல பார்த்துள்ளேன் ஆனால், முழுமையான ஒரு படமாக Aadujeevitham. சலிப்பாக்க வேண்டாம் என்று அவ்வப்போது Flashback.

பாலைவனப்பகுதி கொடூரமாக உள்ளது. ஆட்களும் இல்லை, மொழியும் தெரியாது.

இப்படிப்பட்ட பாலைவனத்தில் ஆட்டை எப்படி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது கடைசி வரை எனக்குப் புரியவில்லை.

ஆடுகளுக்குத் தீன் போடுகிறார்கள். நான் கவனித்தவரை இது மட்டுமே உணவு. மேய்ச்சலுக்கு பிரித்விராஜ் அழைத்துச் செல்கிறார் ஆனால், அங்கே எதுவுமே இல்லை.

ஒருவேளை தீனை கொடுத்து விட்டு, நடைப்பயிற்சி க்கு அழைத்துச் செல்கிறாரா?!

பிரித்விராஜ் காலைக்கடனைக் கழித்து விட்டு, தண்ணீரை பயன்படுத்தியதுக்கு கொலைக் குற்றம் செய்தது போலச் சத்தம் போடுவார்கள்.

பின்ன எப்படியா கழுவுவது? என்றால், மணலைக் காண்பிப்பார் அவரது மூத்தவர். நினைத்துப்பாருங்கள்! இந்த நிலையில் தினமும் காய்ந்த ரொட்டியே உணவு.

பிரித்விராஜ்

பிரித்விராஜ் ஆகச்சிறந்த நடிகர் என்பதைப் பல படங்களில் நிரூபித்துள்ளார். மாஸ் ஆகவும் நடிப்பார் க்ளாஸ் ஆகவும் நடிப்பார்.

ஆனால், துவக்கக் காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாக இல்லை. அவர் பயந்து நடிப்பது அவர் உடல்வாகுக்கோ அல்லது எதோ ஒன்றில் பொருத்தமாக இல்லை.

அதாவது இயல்பாக இல்லை.

ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு தாடி வளர்ந்த பிறகு அப்படியே நடிப்பு அசுரனாக மாறி விட்டார். எப்படிப்பட்ட நடிப்பு!

தப்பிக்க முயன்றதாகக் காலில் தாக்கியதால், அதன் பிறகு தாங்கி தாங்கித்தான் நடப்பார். யாருடன் பேசாமல் இருந்ததால் அவர் பேச்சு முறையே மாறி விடும்.

சில காட்சிகளில் இது பிரித்விராஜ் தானா?! அல்லது வேறு ஒருவரா என்ற சந்தேகமே வந்து விடுகிறது. படத்தில் வசனங்களே மிகக்குறைவு.

பிரித்விராஜ் Flashback காட்சியில் அவரது மனைவியாக அமலா பால் வருகிறார்.

தப்பிக்கும் பகுதி

இந்நிலையில் வருடங்களுக்குப் பிறகு பிரித்விராஜ் நண்பருடன் இன்னொருவரும் சேர்ந்து மூவரும் தப்பிக்கத் திட்டமிட்டுத் தப்பிப்பார்கள்.

கொடூரமான பாலைவனத்தைக் கடந்து செல்வது எளிதல்ல. கொடுமையான வெய்யில், தண்ணீர் இல்லை என்ற நிலையில் இரு நாட்களுக்கும் மேலாக நடப்பார்கள் எங்குமே சாலை தெரியாது, மணலாகவே இருக்கும்.

இப்பகுதியை மிக நீளமாக எடுத்து விட்டார்கள். இவற்றில் கொஞ்சம் பகுதியையும், இதற்கு முன் உள்ள பகுதியிலும் சேர்த்து 25 நிமிடங்கள் குறைத்து இருக்கலாம்.

இது தான் நடக்கும், இதைத்தான் காண்பிக்க முடியும் என்று பார்வையாளர்கள் ஊகித்து விடும் நிலையில் அதை நீட்டித்து இருக்க வேண்டியதில்லை.

ரொம்ப நேரம் படம் போவது போல உள்ளது.

எதிர்பாரா திருப்பம்

ஒருவழியாக தப்பித்து வந்த பிறகு அங்குள்ள மலையாளிகள் அவருக்கு உதவுவார்கள்.

இந்த நேரத்தில் தான் இவருக்கு மிக மிக மோசமான உண்மை தெரிய வரும். பிரித்விராஜ் நிலையைக் கண்டு எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

ஒரு மனுசனுக்கு இப்படியொரு நிலை வந்து இருக்கவே கூடாது என்று தோன்றியது.

இந்த இடத்தில் பிரித்விராஜ் நடிப்பும், உடல் மொழியும், கண்ணீரும், முக பாவனைகளும் டாப் டக்கர். எனக்கு மனசே ஒடிந்து விட்டது.

படம் முடிந்த பிறகும் மனம் நிம்மதியற்று இருந்தது.

ஒளிப்பதிவு பின்னணி இசை

இப்படத்தின் நாயகன் பிரித்விராஜ் என்றாலும், இன்னொரு நாயகன் ஒளிப்பதிவாளர்.

காண்பிப்பதற்கு இடங்களே இல்லை. எங்கும் பாலைவனம், ஆடு, ஒட்டகம், குன்று, மணல் மேலும் மணல். இதையே படம் முழுக்க காண்பிக்க வேண்டிய கட்டாயம்.

பார்ப்பவர்களுக்கு சலிப்பையும் கொடுக்க கூடாது. அதே சமயம் இவற்றையே காட்ட வேண்டிய நிர்ப்பந்தம். காட்சிகள் Orange Tone ல் உள்ளது.

படத்தின் நீளம் காரணமாக ஒரு சலிப்பு இருந்தாலும், காட்சியில் குறை கூற முடியாது. படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம்.

வழக்கமான இசையாக அல்லாமல், சவூதி அரேபியா பகுதிக்கு ஏற்றது போலவும், நமக்கு ஏற்றதும் போலவும் கலந்து பின்னணி இசையை ரகுமான் கொடுத்துள்ளார்.

பலரும் ரகுமான் இசையைப் பாராட்டியுள்ளார்கள். எனக்கு ஓகே என்பது போலத்தான் இருந்தது. சத்தம் குறைவாக வைத்துப் பார்த்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இது போன்ற நேரங்களில் தான் திரையரங்கு அனுபவத்தைத் தவற விடுகிறேன்.

யார் பார்க்கலாம்?

அனைவருமே பார்க்கலாம்.

பாலைவனத்திலேயே சுற்றிக்கொண்டு இருப்பதும், இவர்களின் பரிதாப நிலையையே தொடர்ந்து காண வேண்டியதாக இருப்பதும் சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்.

மற்றபடி பிரித்விராஜ் இரண்டாம் பகுதி நடிப்பு அதிலும் குறிப்பாக இறுதிக்காட்சி நடிப்புக்கவாவது பார்க்க வேண்டும்.

NETFLIX ல் காணலாம்.

Directed by Blessy
Screenplay by Blessy
Based on Aadujeevitham, by Benyamin
Produced by Visual Romance
Starring Prithviraj Sukumaran, Cinematography Sunil K. S.
Edited by A. Sreekar Prasad
Music by A. R. Rahman
Release date 28 March 2024
Running time 173 minutes
Countries India, United States
Language Malayalam

கொசுறு

கதை என்னவோ சவூதி அரேபியா என்றாலும், அங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதியில்லாததால், அருகே உள்ள நாடுகளான ஜோர்டான் மற்றும் அல்ஜீரியா நாடுகளின் பாலைவனத்தில் எடுத்துள்ளார்கள்.

முதலில் தேர்வாகியது சூர்யா ஆனால், அவருக்கு வேறு படப்பிடிப்புகள் இருந்ததால், பிரித்விராஜ் வந்துள்ளார். கேரளா என்பதால், சூர்யாவை விடப் பிரித்விராஜ் பொருத்தமாக இருப்பார்.

காரணம், மலையாளிகள் வளைகுடா நாடுகளுக்கு செல்வது இயல்பு.

இப்படத்துக்காக பிரித்விராஜ் எடை கூடி, இளைத்து மிகக் கடினமாக நடித்துள்ளார். 2010 லிருந்து ஆரம்பிக்கப்பட்டு தயாரிப்பாளர் கிடைக்காமல், கோவிட் உட்பட பல்வேறு தடங்கல்களைத் தாண்டி 2024 ல் வெளியாகியுள்ளது.

இக்கதையில் பிரித்விராஜ் கதாப்பாத்திரத்தில் தப்பித்தவர் இந்தியா வந்து திரும்பச் சில வருடங்களுக்குப் பிறகு சவூதி அரேபியா சென்றதாக செய்திகளில் படித்தேன்.

சிங்கப்பூர்

முதன் முதலில் நான் வேலைக்காக (2007) சிங்கப்பூர் செல்ல முடிவாகிய போது, அப்பாவுக்குப் பயம். இது போன்று ஏமாற்றி விடுவார்களோ என்று.

எனவே, கிளம்பும் நாள் வரை விசாரித்துக்கொண்டே இருந்தார். கன்சல்டன்சி மூலமாக செல்கிறேன் என்பதால், எனக்கு பயமாக இல்லை.

ஆனால், தற்போது யோசித்தால், கொஞ்சம் பயமாக உள்ளது.

செல்லும் போது மொபைலை எடுத்துச் சென்றேன் ஆனால், Roaming Enable செய்யாமல் போய் விட்டேன். சிங்கப்பூர் பணமும் சில்லறையாக இல்லை.

கன்சல்டன்சி அடுக்ககத்துக்கு சென்று கதவைத் தட்டினால், எவரும் திறக்கவில்லை.

அப்போது (2007) தமிழகத்தில் தெருவுக்கு ஒரு STD பூத் இருக்கும் ஆனால், சிங்கப்பூரில் நான் தங்கும் பகுதி Residential area என்பதால், அப்பகுதியே அனாதையாக உள்ளது. ஓரிரு கடைகள் உள்ளது ஆனால், Public Booth இல்லை.

சிங்கப்பூர் வந்தாச்சு என்று அழைத்துச் சொல்லவும் முடியவில்லை. இறங்கிய பிறகு நேரம் கடந்ததால், ஊரில் அனைவரும் பயந்து கொண்டு இருப்பார்களே என்ற கவலை வேறு. சிங்கப்பூர் வந்து 2 மணி நேரம் எனக்கு திகிலாக இருந்தது.

எனவே, புதிதாக வெளிநாடு செல்பவர்கள் Roaming Enable செய்யப்பட்ட மொபைல் கொண்டு செல்லுங்கள். பணம் போனாலும், அவசரத்துக்கு சம்பந்தப்பட்டவரையோ, வீட்டினரையோ தொடர்பு கொள்ள வாய்ப்பாகவாது இருக்கும்.

Aadujeevitham எனக்கு என் அனுபவத்தை நினைவு படுத்தியது.

Read : முதல் வெளிநாட்டு விமானப் பயணம்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. ஒரு சில நடிகர்களை பார்த்தவுடன் பிடிக்கும்.. சிலரை பிடிக்காது.. அந்த வகையில் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபிசிம்ஹா, அதர்வா இவர்களை உடனே எனக்கு பிடித்து போனது. (சில பேர் நினைவுக்கு வரவில்லை). சித்தார்த், (நடிக்கும் போது ஒரே முகபாவம் தற்போது வரை) பிரிதிவ் ராஜ் (அமுல் பேபி லுக்) இவர்களை காணும் போது ஒரு நடிகராக அந்த அளவுக்கு பிடிக்கவில்லை..

    மொழி திரைப்படம் என்னுடைய ஆல் டைம் விருப்ப படம்.. தற்போது சோர்வாக இருக்கும் போது சில காட்சிகளை காணும் போது, அவ்வளவு ரசிப்பேன் .. குறிப்பாக படத்தின் பின்னணி இசை மற்றும் வசனங்கள்.. தற்போது அந்த படத்தை பார்த்தாலும் பிரெஷ்ஷாக இருக்கும்.. சித்தார்த் படங்களில் அவள் படம் பிடிக்கும்..வித்தியாசமான திரில்லர் படமாக இருந்தது..

    ஐயப்பனும் கோஷியும் படத்தில் பிரிதிவ் ராஜின் நடிப்பை பார்த்த பிறகு, அவரின் ரசிகனாகி விட்டேன்.. இந்த படத்தில் அவரின் உடல் மொழி செம்மையா இருக்கும்.. மலையாளிகள் கூட பழகி இருந்ததால் என்னால் அதை உள்வாங்கி கொள்ள முடிந்தது..

    கடுவா படத்தில் வேறுவிதமான ஒரு நடிப்பை கொடுத்து இருப்பார். நான் ஊருக்கு செல்லும் முன் ஆடுஜீவிதம் படத்தை திரையில் பார்த்தேன்.. படம் 12 வருடங்களுக்கு மேல் பல பிரச்சனைகளை சந்தித்து எடுத்து இருந்ததால், நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கில் அமர்ந்தேன்..

    3 மணி நேரம் வேறு உலகில் பயணித்த அனுபவத்தை அது கொடுத்தது.. எங்கள் ஊரில் வெளிநாட்டு வேலைக்காக பல பேர் 30 / 40 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி செல்வார்கள்.. தற்போதும் போயி வருகிறார்கள்.. அதிகம் வீட்டு வேலை / ஒட்டுனர் / ஹெல்பர் வேலைக்கு தான் செல்வார்கள்..

    இவர்களை பற்றிய பல சுவாரசியமான கதைகளை நான் சிறு வயதில் இருந்து கேட்டு இருக்கிறேன்.. சில கதைகள் தற்போது நினைத்தாலும் இனிமையாக இருக்கும்.. திருமண வீடுகளில் / யாரவது இறப்பின் போது பழைய பெரியவர்கள் ஒன்று கூடினால் இரவில் இந்த கதைகளை பேசி கொள்வார்கள்.. நான் கேட்டவரை அவர்களின் சோகமாக நிகழ்வுகளை பகிர்ந்ததில்லை..

    இந்த படத்தை நான் காணும் போது என்னால் முழுமையாக இயக்குனர் கூற வந்ததை உள்வாங்கி கொள்ள முடிந்தது.. ஆனால் இந்த இளைய தலைமுறை படத்தை எவ்வாறு பீல் பண்ணுகிறார்கள் என்று என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.. படத்தில் கேரளா காட்சிகள் அருமையாக காட்சிபடுத்தப் பட்டுள்ளது.. பின்னணி இசையும் நன்றாக இருந்தது..

    படத்தில் என்னை மேலும் கவர்ந்தது பிரிதிவ் ராஜ் நண்பரின் யதார்த்தமான நடிப்பு.. குறிப்பாக இரண்டாம் பாதி அவர்கள் தப்பிக்க திட்டமிடும் போது, ஒரு விதமான சந்தோஷமான மனநிலையை அவரின் கண்ணில் காண முடிந்தது.. இடைவேளைக்கு பிறகு இது தான் நடக்கும் என்று தெரிந்தாலும், அந்த காட்சிகள் அருமையாக எடுத்து இருந்தார்கள்..

    இன்னொரு முறை அழகி படத்தை பார்க்கும் இளகிய மனநிலை எனக்கு இல்லை.. அது போல தான் ஆடுஜீவிதம் படமும்.. மீண்டும் பார்க்கும் மனநிலை தற்போது இல்லை..பாலைவனத்தை பற்றி சிறு வயதிலே பல கதைகளை, கேட்டு கேட்டு வளர்ந்ததால் பாலை நிலத்தின் மீது இயல்பாகவே ஒரு காதல் எப்போதும் உண்டு.. ஆடு ஜீவிதம் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒரு படைப்பு..

  2. @யாசின்

    “சித்தார்த், (நடிக்கும் போது ஒரே முகபாவம் தற்போது வரை) பிரிதிவ் ராஜ் (அமுல் பேபி லுக்) இவர்களை காணும் போது ஒரு நடிகராக அந்த அளவுக்கு பிடிக்கவில்லை.”

    நீங்கள் கூறுவது சரி தான்.

    ஆனால், பிரித்விராஜ் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டார்.

    “ஐயப்பனும் கோஷியும் படத்தில் பிரிதிவ் ராஜின் நடிப்பை பார்த்த பிறகு, அவரின் ரசிகனாகி விட்டேன்.”

    மும்பை போலீஸ் பாருங்க.. செமையா இரு வேறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.

    இதன் விமர்சனம் எழுத வேண்டும் என்பது ரொம்ப வருடங்களாக நினைத்து வருகிறேன். விரைவில் எழுத வேண்டும்.

    “திருமண வீடுகளில் / யாரவது இறப்பின் போது பழைய பெரியவர்கள் ஒன்று கூடினால் இரவில் இந்த கதைகளை பேசி கொள்வார்கள்.”

    ஒவ்வொருவருக்கும் கூற விவாதிக்க ஏராளமான கதைகள், சம்பவங்கள் இருக்கும்.

    “பாலைவனத்தை பற்றி சிறு வயதிலே பல கதைகளை, கேட்டு கேட்டு வளர்ந்ததால் பாலை நிலத்தின் மீது இயல்பாகவே ஒரு காதல் எப்போதும் உண்டு.”

    எனக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு ஆனால், இது போல அல்ல 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!