Google Review Scam

4
Google Rating

வ்வொரு தளத்தின், நிறுவனங்களின், பொருட்களின் Google Review என்பது தற்போது மிக முக்கியமானதாகி விட்டது. Image Credit

Google Review

ஒரு பொருளை நாம் வாங்குகிறோம், சேவையைப் பெறுகிறோம் என்றால், அதனுடைய Review எப்படியுள்ளது? என்று பார்ப்போம்.

கொடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அதிகமாக இருந்தால், சரியாக இருக்கும், தரமாக இருக்கும் என்று நம்பி வாங்குகிறோம்.

ஆனால், இவ்வாறு பொருட்கள் மற்றும் கடைகளின் மதிப்பெண்களைப் பொய்யாகக் கொடுக்கவே பணம் வாங்கி செய்யும் கும்பல்கள் அதிகரித்து விட்டன.

இது கூகுளுக்கு மட்டுமல்ல அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களுக்கும் தலைவலியாகி வருகிறது. இதற்காகத் தொழில்நுட்பங்களை மேம்படுத்தினாலும், அதையும் ஏமாற்றுகிறார்கள்.

scam

தற்போது அதிக மதிப்பெண்கள் கொடுப்பதை வைத்து ஏமாற்றும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப், டெலிகிராம் போன்ற செயலிகளில் இதற்காகவே வலை விரிக்கிறார்கள். ஒரு 5 Star Review போட்டால், அதற்கு ஐந்து ருபாய்.

இது போல அவர்கள் கொடுக்கும் நிறுவனங்களின் பட்டியலில் எத்தனை Review போலியாகக் கொடுக்கிறார்களோ அதற்கு ஏற்ற பணம் வழங்குவதாகக் கூறுவார்கள்.

அதற்கு முன் பணம் ₹2000 செலுத்த வேண்டும் என்றும், அது எவ்வாறு வளர்கிறது என்பதை போலியான தளத்தில் காண்பிப்பார்கள்.

பார்ப்பவர்களுக்கு, ‘அட! நம் பணம் உயர்ந்து கொண்டே செல்கிறதே!‘ என்று, தொடர்ச்சியாகப் பணத்தைப் போட்டு மொத்தமாக இழந்து விடுவார்கள்.

இது போல ஒரே நாளில் ₹50,000 – ₹60,000 வரை இழந்துள்ளனர். அவர்கள் கொடுக்கும் தகவல்கள், பேச்சு, அவசரம் ஆகியவை ஒருவரை சிந்திக்கவே விடாது.

எல்லாமே முடிந்த பிறகே செய்த தவறு உரைக்கும் ஆனால், பணம் தொலைந்து இருக்கும்.

இது போன்று ₹50,000 இழந்தவர்கள் அதாவது இது போன்று போலியான விமர்சனம் எழுதித் தவறு செய்து இழந்தவர்கள் புகார் அளிக்க மாட்டார்கள் என்பது ஏமாற்றுபவர்களின் பலம்.

பங்குச் சந்தை

மேற்கூறிய முறையில் போலி இணைய தளத்தில் அவர்களுக்கு இலாபம் அதிகரிப்பது போலக் காண்பித்து ஏமாற்றி, ₹50,00,000 – கோடிகளில் ஏமாற்றியுள்ளார்.

முதல் இரு முறை உண்மையாகவே சிலர் ₹30,000 ₹50,000 என்று நம்பிக்கை வருவதற்காகப் பணத்தைக் கொடுப்பார்கள்.

சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் செயல்.

சம்பந்தப்பட்டவர்களும் அதிக ஆசை காரணமாக, மேலும் அதிகம் பணம் கிடைக்கும் என்று நம்பி பணத்தை தொலைத்து அலைந்து கொண்டு இருப்பார்கள்.

என்ன செய்யக் கூடாது?

  • அறிமுகமில்லாதவர்களின் நிதி ஆலோசனைகளைக் கேட்கக் கூடாது.
  • சமூகத்தளங்களில், செயலிகளில் வருபவர்களை நம்பக் கூடாது.
  • முன் பணம் கேட்டாலே தொடர்பைத் துண்டித்து விட வேண்டும்.
  • யாரிடமும் OTP உட்பட வங்கி விவரங்களைக் கொடுக்கக் கூடாது
  • எந்த Link யையும் க்ளிக் செய்யக் கூடாது.
  • இதைச் செய்தால் லாபம் கிடைக்கும் என்று ஒருவர் கூறினால், ஆப்பைத் தயார் செய்து விட்டார் என்று அர்த்தம்.
  • குறுகிய காலத்தில் இலாபம், விரைவாக இலாபம், இரட்டிப்பு இலாபம் என்றாலே அப்பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாது.
  • விவரம் தெரியாதவர்கள் டெலிகிராம் பக்கம் செல்லவே கூடாது.
  • வாட்ஸப்பில் அறிமுகமில்லாதவர் Hi, Hello, How are you? கூறினால் உடனடியாக Block செய்து விட வேண்டும்.

இவற்றைச் செய்தால், ஏமாறாமல் தப்பிக்கலாம்.

இதுவும் தவறே

ஒரு பொருளை, சேவையைப் பயன்படுத்தி, அது எப்படியுள்ளது என்று விமர்சனம் கூறுவது சரி ஆனால், பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காகப் பயன்படுத்தாமலே அதற்கு 5 Star Rating கொடுப்பது மோசமானது.

ஏமாற்றுபவன் செய்வது எப்படித் தவறானதோ அதே போலத்தான், போலியான விமர்சனத்துக்குத் துணை போவது. இருவருக்கும் என்ன வித்தியாசம்?

நாம் எழுதும் விமர்சனத்தை நம்பி ஒரு பொருளை வாங்குகிறவர் ஏமாறுகிறார் என்றால், அதற்குப் போலி விமர்சனம் எழுதியவரும் பொறுப்பே.

அமேசானில் பொருள் வாங்கியதற்கு உடன் ஒரு Paytm கூப்பனும் வந்தது. 5 Star Rating கொடுத்தால், உடனடியாக ₹50 வரவு வைக்கப்படும் என்று.

நான் வாங்கிய பொருள் தரமானதாகவே இருந்தது, அவர்கள் அதைக் கூறவில்லையென்றாலும் 5 Star வழங்கியிருப்பேன் ஆனால், இதைப் பார்த்த பிறகு கடுப்பாகி மதிப்பெண் வழங்கவில்லை.

தொழில் போட்டி சண்டை

Google Review ல் பல மோசடிகள் நடைபெறுகிறது.

தொழில் போட்டியாளர் என்பதால், வேண்டும் என்றே ஆட்களை வைத்துக் குறைவான மதிப்பெண் வழங்குவது, புகார் கூறுவதும் நடைபெறுகிறது.

இவ்வாறு செய்து ஒரு நிறுவனத்தின், கடையின், தளத்தின் மதிப்பெண்ணைக் குறைத்து வியாபாரத்தை நசிப்பதும் நடக்கிறது.

Google Review ல் Level 7 ல் இருக்கிறேன். இன்று வரை போலியான ஒரு விமர்சனம் கூடச் செய்ததில்லை.

எனவே, நீங்களும் யாரையும் ஏமாற்றாதீர்கள், யாரிடமும் ஏமாறாதீர்கள்.

ஏமாற்றிச் சம்பாதிக்கும் பணம் என்றுமே நிலைக்காது.

கொசுறு

மேற்கூறியவை சிட்பண்ட் நடத்தி கொள்ளை அடிப்பதைப்போலவே தான்.

ஒரு லட்சம் போட்டால் இரண்டு லட்சம் கிடைக்கிறது என்று கூறினால், உடனே திமு திமுன்னு குவிந்து விட வேண்டியது. அது சாத்தியமா! என்று யோசிப்பதில்லை.

1000 முறை சம்பவங்கள் நடந்து செய்திகளில் வந்தாலும் 1001 முறையும் ஏமாறுவார்கள். எப்படி இது போல முட்டாள்களாக இருக்கிறார்கள்! என்று தோன்றும்.

இனியும் ஏமாறுவார்கள். பேராசை பெரு நட்டம்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. நீங்கள் சொன்னது எல்லாமே உண்மை. எனக்கு அடிக்கடி whatsapp இல் பெண் புகைப்படம் போட்டு hi, how are you. என்று வரும். யாரு நீங்கள் என கேட்டால் விளம்பர message அல்லது லிங்க் அனுப்பி click செய்ய சொல்வார்கள். உடனடியாக block செய்து விடுவேன். spam call தொல்லை சிறிது குறைந்து இருக்கிறது. சிரமம் பார்க்காமல் spam call வந்த உடன் எந்த ஏர்டெல் அப் சென்று spam Call புகார் அளித்து விடுவேன் அவர்களும் தனி நபர் நம்பர் என்றால் ஒரு மாதத்திற்கு அந்த நம்பருக்கு 20 call அல்லது 20 sms மட்டுமே போகுமாறு block செய்து விடுவார்கள். இதுவே ஒரு நிறுவனம் நம்பரின் மேல் புகார் அளித்தால் அவ்வாறு நடவடிக்கை எடுப்பதில்லை. அப்புறம் Truecaller இல் இது spam call எவ்வகையான spam என்று comment போட்டு விடுவேன். பிறருக்கு உபயோகமாக இருக்கும். Truecaller மிக வசதியாக உள்ளது. பல பேர் இப்படி அந்த spam நம்பர் எந்த வகை என Truecaller இல் போட்டு விடுவதால் call வரும் போதே பார்த்து block செய்து நானும் comment போட்டு விடுவேன். suggestion name இல் fraud என்று போட்டு விடுவேன். high level புகார் வந்த எண் என்றால் Truecaller அந்த எண்ணை தானாகவே block செய்து விடும்

  2. கிரி.. இந்த ஒரு விஷியம் மட்டும் பல காலமாக புரியவில்லை.. நடுத்தர,அதற்கும் கீழ் பொருளாதாரத்தில் இருப்பவர்கள் தான் அதிகம் ஏமாறுகின்றார்.. அதிலும் எத்தனை முறை செய்திகளில் பார்த்த பின்னும் மீண்டும் மீண்டும் ஏமாறுவதை அறியாமை என்பதா?? இல்லை பேராசை என்பதா?? ஒன்றுமே புரியவில்லை.. சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் போல ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடைய ஆசையை தூண்ட வேண்டும்.. இது 100% உண்மை தான்..

    நான் சிறுவனாக இருந்த சமயத்தில் கலைமகள் சபா மற்றும் ஏதோ தேக்கு மரம் வளர்க்கும் திட்டம் என்று ஒரு (பெயர் நினைவில் இல்லை) நிறுவனம் இருந்தது.. அந்த சமயத்தில் அவர்களின் விளம்பரம் மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.. சில வருடங்களுக்கு பின்பு தான் இரண்டு நிறுவனமும் போலியானவை என்று அரசாங்கத்தால் கண்டறியப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.. அந்த சமயத்தில் நிறைய பேர்கள் இதில் முதலீடு செய்து ஏமார்ந்து போனதாக செய்திகளில் படித்த நினைவு இருக்கிறது.. இந்த நிகழ்வுகளை சிறு வயதிலே மனதில் ஆழமாக பதிந்து போனதால் இது போன்றவற்றிலிருந்து ஒதுங்கி போய் விடுவேன்..

    என்னுடைய ஒரு நண்பன் சொல்லியது நினைவுக்கு வருகிறது.. பழக்கமே இல்லாத ஒருத்தன் நமக்கு ஓசில டீ வாங்கி கொடுக்குறானா??? நமக்கு ஆப்பை சீவிக்கினு இருக்கானு அர்த்தம்.. அந்த ஆப்பை அவன் தூக்கி வைக்கிறதுக்கு முன்னாடி, நாமே அவன் மேல வச்ச நம்பிக்கையில (ஓசி டீ) தூக்கி சொருகிப்போம் என்பான்.. விளையாட்டா சொன்னாலும் இது உண்மை தான்.. குறிப்பா என்னை போல் ஏதோ ஒரு நாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு யார் நல்லவன்? யார் கெட்டவன்?? என்பதை அடையாளம் காண்பது மிக கடினம்.. (இதைச் செய்தால் லாபம் கிடைக்கும் என்று ஒருவர் கூறினால், ஆப்பைத் தயார் செய்து விட்டார் என்று அர்த்தம்) என் நண்பன் கூறியதும் இது தான்..

  3. @ஹரிஷ்

    “யாரு நீங்கள் என கேட்டால் விளம்பர message அல்லது லிங்க் அனுப்பி click செய்ய சொல்வார்கள். உடனடியாக block செய்து விடுவேன்.”

    க்ளிக் செய்தால் முடிந்தது 🙂 .

    “சிரமம் பார்க்காமல் spam call வந்த உடன் எந்த ஏர்டெல் அப் சென்று spam Call புகார் அளித்து விடுவேன்”

    சிறப்பான வேலை. நானும் செய்து விடுவேன் ஆனால், DND App வழியாக செய்கிறேன்.

    “இதுவே ஒரு நிறுவனம் நம்பரின் மேல் புகார் அளித்தால் அவ்வாறு நடவடிக்கை எடுப்பதில்லை.”

    எனக்கும் இதுவே நடக்கிறது.

    “Truecaller இல் இது spam call எவ்வகையான spam என்று comment போட்டு விடுவேன். பிறருக்கு உபயோகமாக இருக்கும்.”

    உங்கள் பொது நல எண்ணத்தைப் பாராட்டுகிறேன். இதே பலரும் செய்தால் மாற்றம் வரும் ஆனால், பெரும்பான்மையோர் செய்வதில்லை.

    அதிக DND புகார் செய்தது என்று ஏர்டெல் ஒரு கணக்கெடுத்தால், அதில் நிச்சயம் நானும் ஒருவனாக இருப்பேன் 🙂 .

  4. @யாசின்

    “நடுத்தர,அதற்கும் கீழ் பொருளாதாரத்தில் இருப்பவர்கள் தான் அதிகம் ஏமாறுகின்றார்.”
    “அதிலும் எத்தனை முறை செய்திகளில் பார்த்த பின்னும் மீண்டும் மீண்டும் ஏமாறுவதை அறியாமை என்பதா?? இல்லை பேராசை என்பதா?? ஒன்றுமே புரியவில்லை”

    இரண்டுமே உள்ளது.

    “சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் போல ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனுடைய ஆசையை தூண்ட வேண்டும்.. இது 100% உண்மை தான்”

    🙂 உண்மை.

    “நான் சிறுவனாக இருந்த சமயத்தில் கலைமகள் சபா மற்றும் ஏதோ தேக்கு மரம் வளர்க்கும் திட்டம் என்று ஒரு (பெயர் நினைவில் இல்லை) நிறுவனம் இருந்தது.”

    நானும் இது பற்றி படித்துள்ளேன்.

    அறிமுகம் இல்லாதவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரிந்தவர்களே ஏமாற்றும் போது இவர்கள் எம்மாத்திரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!