அரசியலில் நேர்மை எதனால் சாத்தியமில்லை?

2
அரசியலில் நேர்மை

ரசியலில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பல காலமாக அனைவரும் கூறி வருகிறார்கள் ஆனால், யாருமே அவ்வாறு இருக்க முடியாது என்பதே எதார்த்தம்.

அப்படி இருந்தால், அவர் அரசியலில் கண்டுகொள்ளப்படாதவராகவே இருப்பார்.

எதனால் இப்பிரச்சனை?

வேறு ஒன்றும் கம்பசூத்திரம் கிடையாது, பணம் தான் காரணம். அரசியலில் நிலைக்க வேண்டும் என்றால், செலவுக்குப் பணம் வேண்டும். Image Credit

பணம் இருந்தால் மட்டும் போதாது அதோடு ஆளுமைத்திறன், பேச்சுத்திறன், மக்களைக் கவரும் விதம் ஆகியவை இருந்தாலே அரசியலில் பிரகாசிக்க முடியும்.

கூச்சம், தயக்கமே இல்லாமல் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும்.

இருவகை அரசியல் செய்ய முடியும். ஒன்று தனித்து அரசியல், இன்னொன்று கட்சியிலிருந்து அரசியல்.

தனித்து அரசியல் என்பது பின்புலம் எதுவும் இல்லாமல், அவ்வப்போது தான் இருப்பதை நினைவூட்டச் செய்வது.

கட்சி அரசியல் என்பது, ஒரு கட்சியைத் துவங்கி நடத்துவது அல்லது கட்சியில் இணைந்து பணி புரிவது.

இந்த இரண்டுமே அந்தந்த நிலைக்குச் செலவு பிடிக்கும் விஷயம்.

கட்சி நடத்துவது எளிதல்ல?

ஒரு கட்சியைத் துவங்கி, தொடர்வது என்பது அதுவும் தற்காலத்தில் நடத்துவது மிக மிகக்கடினம்.

கூட்டம், நிகழ்ச்சி, தேர்தல், பரப்புரை என்று ஏகப்பட்ட செலவுகள் ஆகும். இதைக் கட்சித் தலைவரே செய்ய முடியாது, கட்சித் தொண்டர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.

எவரும் சொந்தக்காசை வீண் செய்ய முட்டாளில்லை. எனவே, அதற்குண்டான பலனை ஏதாவது ஒரு வகையில் பெறுவார்கள். அவ்வாறு பெறும் பலன் நியாயமானதாக இருக்க வாய்ப்பில்லை.

கட்ட பஞ்சாயத்து செய்வது, லஞ்சம் வாங்கி வேலையைச் செய்து தருவது, தொழிலதிபர்களிடம் பணம் பெறுவது, நன்கொடை என்ற பெயரில் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே கட்சியை நடத்த முடியும்.

எடுத்துக்காட்டு

ஊழலை எதிர்த்துக் கட்சியை ஆரம்பித்த கெஜ்ரிவால் ‘ஆம் ஆத்மி’ கட்சியே ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

இன்று ஊழலுக்காக அவரது கட்சியினர் சிறைக்கு சென்று இருந்தால் கூடப் பரவாயில்லை ஆனால், கட்சியின் நிறுவனரே சிறை சென்றுள்ளார்.

அரசு வீட்டை மறுசீரமைக்கிறேன் என்று 40 கோடிக்கு மேல் கணக்குக் காட்டி, கிறுகிறுக்க வைத்துள்ளார்.

அதிலும் குறிப்பிட்ட எதோ ஒரு செலவு யாராலும் நம்பவே முடியாத கணக்கைக் கொடுத்து இருந்தார். எனவே, தற்காலத்தில் கட்சி துவங்கி நேர்மையாக நடத்துவேன் என்று கூறுவது கட்டுக்கதையே.

விஜய்க்கும் இது பொருந்தும்.

இனி வரும் காலங்களில் புதிதாக கட்சி துவங்கி வளர்ந்து, பெரிய போட்டி கட்சியாக, தனித்து வளருவது என்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

அதோடு ஒருவரை மட்டுமே நம்பி இருக்கும் கட்சிக்கு எதிர்காலமில்லை.

100% சாத்தியமே இல்லாதது

இனியெல்லாம் கட்சி ஆரம்பித்து அதை வளர்த்து, அதை விட முக்கியமாக நேர்மையாகத் தொடர்வது என்பது 100% சாத்தியமே இல்லாதது.

இதற்குப்பதிலாக, ஏற்கனவே உள்ள, தன் கொள்கைக்கு ஏற்றக் கட்சியில் இணைந்து பொறுப்பைப் பெற்றுக்கொள்வது நல்லது.

ஏனென்றால், ஒரு கட்சியைத் துவங்கும் அளவுக்கு ஒரு நபர் இருக்கிறார் என்றால், அவருக்கு மற்ற கட்சியில் சாதாரணப் பொறுப்பைக் கொடுக்கப்போவதில்லை. எனவே, இவ்வழியே சிறந்தது.

கெத்துக்காகக் கட்சி ஆரம்பித்து ஆதரவு இல்லாமல், செலவும் அதிகமாகி சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுவதை விட ஒரு கட்சியில் இணைந்து விடுவது நல்லது.

இல்லையென்றால் Letter Pad கட்சியாகக் கம்பு சுற்றலாம்.

சின்னக் கணக்குபோட்டுப்பாருங்க

பல பயணங்கள், சந்திப்புகள், விழாக்கள், உதவிகள் என்று இவற்றுக்கெல்லாம் செலவழிக்க நேர்மையாக இருந்தால் எப்படி பணம் கிடைக்கும்?

உள்நாட்டு விமானப்பயணம் என்றாலே ₹5,000 முதல் ₹10,000 வரை செலவாகிறது. சில நேரங்களில் உடன் வருபவருக்கும் செலவழிக்க வேண்டியதிருக்கும்.

ஒரு கூட்டம் நடத்தச் சில லட்சங்களைக் கட்சி நபர் செலவழிக்கிறார். இதைச் செலவழிக்கிறார் என்றால், சொந்தக்காசையா செலவு செய்வார்?!

சொந்தக்காசைச் செலவு செய்தாலும், அதைத் திரும்ப எப்படி எடுப்பது என்பதே அவர் யோசனையாக இருக்கும்.

செலவல்ல, முதலீடு

சென்னையில் ஒரு கூட்டத்துக்கு வந்த அனைவருக்கும் திமுக நபர் Plastic Chair கொடுத்தார். இதற்கான செலவு ₹8 லட்சம் என்று அவரே கூறினார்.

கட்சிப்பொறுப்பில் மட்டுமே உள்ள இவர் இப்பணத்தை எப்படி எடுப்பார்? யோசித்துப்பாருங்களேன். ₹8 லட்சம் என்பது இவருக்குச் செலவல்ல, முதலீடு.

பணம் கொடுத்தால் தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். மக்களுக்குப் பணத்தைக் கொடுக்க அரசியல்வாதிகள் என்ன இளிச்சவாயர்களா? இரு தரப்பிலும் ஊழல், நேர்மையற்ற தன்மை.

எனவே தான் இவற்றைச் சமாளிக்க நேர்மையாக இருக்க முடியாது போகிறது. அரசியலுக்கு வருவதே சம்பாதிக்கத்தான் என்பதில் தெளிவாக உள்ளார்கள்.

எதார்த்தம்

அரசியலில் தொடர வேண்டும், நடப்பு அரசியல் பேசு பொருளாக இருக்க வேண்டும் என்றால், செலவு செய்தே ஆக வேண்டும், அதற்கு பணம் எங்கே இருந்து வரும்?

புதுப்பேட்டை படத்தில் தனுஷுக்கு அழகம்பெருமாள் ஒரு கட்சிப் பொறுப்பு கொடுத்ததும் தனுஷ் மதிப்பு கூடி விடும்.

அந்த மதிப்பை, அதிகாரத்தை, வட்டச் செயலாளர், மாநிலச் செயலாளர் என்று கூறி ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி பணம் பார்ப்பார்கள்.

மக்களுக்கு இலவசம், பணம் என்று எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் வருகிறவர் எப்படி இருப்பார்? மக்களுக்கு இலவசத்தைக் கொடுத்து விட்டு, தான் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதையே நினைப்பார்.

பணத்துக்கு வாக்களித்தால், கள்ளச்சாராயம் வராமல், கரும்புச்சாறா வரும்‘ என்று மீம் வந்தது போல, மக்கள் எவ்வழியோ அரசியல்வாதிகளும் அவ்வழி.

இனியெல்லாம் அரசியல்வாதிகளிடம் நேர்மை இல்லையென்று சொல்வதெல்லாம் நகைப்புரியதாகி விட்டது, நடைமுறையில் சாத்தியமே இல்லை.

முழுக்க பணமாக இல்லையென்றாலும், ஏதாவது ஒரு வகையில் அனுசரித்துச் சென்றே ஆக வேண்டும் இல்லையென்றால் அரசியலில் survive ஆக முடியாது.

இருப்பதற்குள் யார் பரவாயில்லை என்று தேர்ந்தெடுக்கும் நிலையில் தான் மக்கள் உள்ளனர். மக்கள் மாறாதவரை அரசியலும் மாறாது.

கொசுறு

நான் இதுவரை பணத்தையோ, மறைமுகப் பலனையோ பெற்று வாக்களித்ததில்லை.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. தற்போது அரசியல் கட்சி என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்துவதை போல் தான் உள்ளது. ஒரு கட்சியின் பொதுக்குழுவிற்கு எவ்வளவு செலவாகிறது என்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம். முன்பு அரசியல் என்பது ஒரு சேவை என்ற எண்ணத்தோட பணியாற்ற வேண்டும் என்ற மரபு ஓரளவுக்கு இருந்தது.. இதெல்லாம் என்றோ காணாமல் போகி விட்டது..

    நடிகர் விஜயின் எண்ண ஓட்டத்தை உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை.. ரஜினி, கமல் இவர்களால் எட்ட முடியாத தூரத்தை அரசியலில் எட்ட வேண்டும் என்று எண்ணி அரசியலில் நுழைந்துள்ளார்.. இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டும் தான் உள்ளது.. அதற்குள் கட்சியை பலபடுத்த வேண்டும்.. இல்லையென்றால் சிரமம் தான்.. வெறும் சமூக வலைத்தளங்களை மட்டும் வைத்து கொண்டு அரசியல் செய்ய இயலாது..

    மக்களை நேரிடையாக எதிர்கொள்ள வேண்டும்.. மீடியாவை எதிர்கொள்ள வேண்டும்.. இவைகளை தாண்டி இவர் சொல்லும் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்.. நிச்சயம் யோசிக்காமல் விஜய் அரசியலில் வந்து இருக்க மாட்டார்.. ஒன்றுக்கு 1000 முறை யோசித்து இருப்பார்.. பின்பு காலம் தான் பதில் கூற வேண்டும்.. ஆனால் தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் போது புசி ஆனந் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மீடியாவினால் அதிக கவனம் பெறுபவைகளாக இருக்கும் என எண்ணுகிறேன்..

    30 வருடங்களுக்கு மேல் ஜெயலலிதாவின் கூடவே இருந்த சசிகலா ஜெ வின் இறப்பிற்கு பின், தன்னை அதிமுக தலைவர் என்று பிரகடனம் செய்து அவர் வாசித்த முதல் அறிக்கை வாழ்நாளில் மறக்க முடியாது..இவர் மீது கொடுக்கப்பட்ட buildup எல்லாம் உடைப்பதாக இருந்தது அந்த அறிக்கை.. அரசியல் ஞானி, சகுனி, எப்பா.. முடியல…

  2. @யாசின்

    “முன்பு அரசியல் என்பது ஒரு சேவை என்ற எண்ணத்தோட பணியாற்ற வேண்டும் என்ற மரபு ஓரளவுக்கு இருந்தது.. இதெல்லாம் என்றோ காணாமல் போகி விட்டது..”

    சரி தான்.. இன்னொன்று முன்பு தலைவர்கள், தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்கள்.

    தற்போது தலைவர்களும் மாறி விட்டார்கள் அதனால் தொண்டர்களும் மாறி விட்டார்கள். பணம் இல்லாமல் இங்கே எந்த வேலையும் நடைபெறாது.

    “அதற்குள் கட்சியை பலபடுத்த வேண்டும்.. இல்லையென்றால் சிரமம் தான்.. வெறும் சமூக வலைத்தளங்களை மட்டும் வைத்து கொண்டு அரசியல் செய்ய இயலாது.”

    சீமானுடன் கூட்டணி அமைத்தால், குறிப்பிடத்தக்க வாக்குகளை பெறுவார். தனித்து நின்றால், படு தோல்வியடைவார்.

    “மக்களை நேரிடையாக எதிர்கொள்ள வேண்டும்.. மீடியாவை எதிர்கொள்ள வேண்டும்.. இவைகளை தாண்டி இவர் சொல்லும் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்”

    விஜய்க்கு ஊடகங்களை சந்திக்க தைரியம் இல்லை. இவர் பெரும்பாலும் தயாரிக்கப்பட்ட உரையையே பேசி வருகிறார்.

    திடீரென்று கேட்கப்படும் கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியாது, திணறுவார். இதனாலயே ஊடங்களை சந்திப்பதில்லை.

    விருது நிகழ்ச்சியில் ஊடகங்களை அருகிலேயே விடவில்லை. எவ்வளவு நாட்களுக்கு இப்படியே காலத்தை தள்ள முடியும்.

    “தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் போது புசி ஆனந் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மீடியாவினால் அதிக கவனம் பெறுபவைகளாக இருக்கும் என எண்ணுகிறேன்..”

    தளபதி பெயர் கொண்டவர் என்று விஜய் பெயரைக் கூறவே தயங்குகிறார். இவரெல்லாம் பரிதாபம் தான்.

    “இவர் மீது கொடுக்கப்பட்ட buildup எல்லாம் உடைப்பதாக இருந்தது அந்த அறிக்கை.. அரசியல் ஞானி, சகுனி, எப்பா.. முடியல…”

    🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!