வருமான வரி | 30% வரி கட்டுவோர் சங்கம்

5
வருமான வரி

ந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் வருமான வரி குறித்த விவாதங்கள் பட்ஜெட்டுக்கு முன்பு இருந்தே மிகப்பெரிய விவாதப்பொருளாக இருந்தது.

வருமான வரி

கடந்த 20 வருடங்களாகவே வருமான வரி குறித்த விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன ஆனால், இந்த முறை வழக்கத்தை விட அதிகம்.

எதிர்பார்த்து எதிர்பார்த்து பலரின் Threshold Reach ஆனது அல்லது சலிப்பானது காரணமாக இருக்கலாம். Image Credit

இந்தியா முழுக்க 7% பேர் தான் 140+ கோடி பேரில் வரி செலுத்துகிறார்கள்.

₹15 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் 30% வரியால் கோபமாகும், சலிப்பாகும் நபர்களில் ஒருவனாக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

நடுத்தர மக்கள்

வரி விதிப்பில் நடுத்தர மக்களுக்கு வரி அதிகம் என்பது போலக் கட்டமைக்கப்படுகிறது ஆனால், வரி குறைக்கப்பட்டு 5% – 10% வரிக்குள்ளேயே அனைத்து நடுத்தர மக்களும் வந்து விடுவார்கள்.

எனவே, நடுத்தர மக்களுக்குப் பாதகமான வரி என்பது அரசியல் மட்டுமே.

30% வரி கட்டும் 3% நபர்கள்

இங்கே தான் நான் வருகிறேன் (என்னைப் போல மற்றவர்களும்).

பணியில் உள்ளவர்களுக்கு வரி பிடித்தம் போகத்தான் சம்பளமே வரும். எனவே, ₹100 சம்பாதித்தால், ₹70 ரூபாய் தான் கிடைக்கும்.

இதன் பிறகு கட்டும் வரிகள்

இந்த வரிகள் நான் மட்டுமல்ல அனைத்து மக்களும் (மாநில வரிகளும் உள்ளடக்கி) வரி கட்டுகிறார்கள். இறுதியில் இதற்கான காரணத்தைக் கூறுகிறேன்.

  • வீட்டு வரி
  • சொத்துவரி
  • தண்ணீர் வரி
  • குப்பை வரி
  • சாலை வரி
  • எரிபொருள் வரி
  • வீடு வாங்கினால் வரி
  • வீடு விற்றால் வரி
  • இடம் வாங்கினால் வரி
  • இடம் விற்றால் வரி
  • பெயர் மாற்றினால் வரி
  • வாகனம் வாங்கினால் வரி
  • சுங்கச்சாவடிக் கட்டணம்
  • ஒவ்வொரு பொருட்களை வாங்கும் போதும் கட்டும் GST
  • காப்பீட்டுக்கு 18% வரி
  • மொபைல் கட்டணத்துக்கு 18% வரி
  • திரைப்படம் உட்பட எந்தச் சேவையைப் பயன்படுத்தினாலும் வரி.
இவ்வாறு 30% வரி கட்டுபவர்கள் தோராயமாக தங்களது ஆண்டு வருமானத்தில் 40% வரி கட்டுகிறார்கள் ஆனால், எந்தச் சலுகையும் இல்லை.

மேலை நாடுகளில் 40% வரி வாங்குகிறார்கள் ஆனால், அவர்களுக்கு தரமான கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, பொதுப் போக்குவரத்து கிடைக்கிறது.

ஆனால், இங்கே கல்விக்கட்டணம் கொடுக்கவே தனியாகச் சம்பாதிக்க வேண்டியதாக உள்ளது.

வேறு வகையில் உதவலாம்

அரசு வரியைக் குறைக்கவில்லையென்றாலும் சம்பளத்தில் PF, NPS போன்ற எதிர்காலப் பாதுகாப்புக்கு ஏதாவது மறைமுகமாகக் கூடுதலாகக் கொடுத்து உதவலாம். வேறு ஏதாவது பிரிவில் முக்கியத்துவம் கொடுக்கலாம்.

மேற்கூறியது எடுத்துக்காட்டுக்கு மட்டுமே, இது போன்ற உதவிகளைச் செய்யலாம்.

ஆனால், நிறைய சம்பாதிக்கிறாய் அதனால் நிறைய கொடுக்க வேண்டும் என்பது ஒரு கேடுகெட்ட கம்யூனிச சிந்தனையாக உள்ளது.

நாளைக்கு எனக்கு பணி இழப்பு (Layoff) ஏற்பட்டாலோ, உடல் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டாலோ அப்போது அரசாங்கம் ஏதாவது கொடுத்து உதவப்போகிறதா?!

எதுவுமில்லை.

உறிஞ்சுகிற வரை உறிஞ்சி விட்டு, இனி உதவ மாட்டோம் என்றால், சக்கையாகத் தூக்கி எறிந்து விட்டுப் போய் விடுகிறது.

இவ்வளவு பணத்தை எங்களிடமிருந்து வாங்கும் அரசாங்கம் எங்கள் வாழ்க்கை பாதுகாப்புக்கு என்ன செய்கிறது?

அதாவது நீ வாழ்க்கையில் முன்னேறாதே, முன்னேறி அதிகச் சம்பளம் வாங்கினால் நாங்க பிடுங்கி கொள்வோம் என்கிறதா?

எங்கே சேமிப்பது?

  • வங்கியில் வைத்து இருந்தால் வட்டிக்கு வரி.
  • FD யில் போட்டால் அதற்கு வரும் வட்டிக்கு வரி.
  • Mutual Fund ல் வைத்து இருந்து எடுத்தால் இலாபத்தில் வரி.
  • எதிர்காலத் தேவைக்கு NPS ல் சேமித்து அதிலிருந்து இறுதிக்காலத்தில் எடுக்கப்படும் மாத தொகைக்கு வரி.

எங்கே தான் பணத்தை வைப்பது?! நாளைக்கு எங்களுக்கு ஒன்று என்றால், குடும்பத்தைப் பாதுகாக்க அரசாங்கம் பணம் கொடுக்குமா?

Mutual Fund ல் வைத்து இருந்து எடுத்தால் இலாபத்தில் பங்குக்கு வருவது போல, நட்டத்துக்கும் வர வேண்டியது தானே!

எதிர்காலத்தில் சேமிப்பு வட்டி குறைந்து கொண்டே போகும், அப்போது இருக்கும் பண வீக்கத்தை எப்படிச் சமாளிப்பது? சேமித்த பணத்தில் தானே கையாள முடியும்.

எங்களுக்கு எங்கே?

  • அடித்தட்டு மக்களுக்கு விலையில்லா பொருட்கள் என்று வழங்கப்படுகிறது.
  • நடுத்தர மக்களுக்கு வருமான வரிக்குறைப்பு.
  • சிறு தொழில் செய்பவருக்கு ₹20 லட்சம் முத்ரா கடன்.
  • தொழிலை ஊக்குவிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகைகள்.
  • Startup நிறுவனங்களுக்கு ஏஞ்சல் வரி ரத்து.

30% வரி கட்டும் தனி நபர்களுக்கு என்ன கிடைக்கிறது? இவங்க வெறும் 3% அதனால் இவனுக என்ன கத்தினாலும் கண்டுகொள்ள தேவையில்லை என்ற எண்ணமா?

அரசியலில் தான் சிறுபான்மையினருக்குச் சலுகைகள் கொடுப்பார்கள் ஆனால், வரித்துறையில் 3% சிறுபான்மையினரிடம் தான் அதிகம் பிடுங்குவார்கள்.

பயன் இல்லாமல் போகும்

முன்பு வரிகள் முறையற்று இருந்தது. எனவே, பலர் ஏமாற்றிக்கொண்டு இருந்தனர் ஆனால், தற்போது GST வந்த பிறகு அவ்வாறு செய்வது குறைந்து விட்டது.

சுங்கச்சாவடியில் FasTag வந்த பிறகு ஊழல் கிட்டத்தட்ட நின்று விட்டது. அனைத்தும் அரசுக்குச் சென்று சேர்கிறது.

எனவே, அதிகளவில் வரி, கட்டணம் வசூலாகிறது. எனவே, இவ்வாறு வசூலாகும் பணத்தில் கட்டணத்தை, வரிச்சுமையைக் குறைக்க முயற்சிக்கலாம்.

எரிபொருளில் சேமித்த பணத்தை வேறு வகையில் மக்களுக்குச் சலுகையாகக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்கலாம்.

இதையெல்லாம் செய்யவில்லை என்றால், ஒருவேளை அடுத்த முறை காங்கிரஸ் வந்தால், மொத்தத்தையும் துடைத்து வைத்து பெயரையும் தட்டிச் சென்று விடுவர்.

இறுதியில் இதுவரை சேமித்த பணத்தால் பயனும் இல்லாமல் போகும். இப்பலனைக் காங்கிரஸ் அறுவடை செய்து விடும்.

நொங்கு சாப்பிடுவது காங்கிரஸாகவும், விரல் சூப்புவது பாஜகவாகவும் இருக்கும்.

வரி எவ்வளவு?

வருமான வரி

மேற்கூறியதில் 15% வரி கட்டுபவர்கள் வரை வரிச்சலுகை இந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்கள் இதிலேயே அடங்கி விடுவர்.

தனி நபரின் ஆண்டு வருமானம் ₹50 லட்சத்தைத் தாண்டினால் அதற்குக் கூடுதல் Surcharge. இதெல்லாம் எவ்வளவு பேருக்குத் தெரியும்!

அதாவது ₹1 கோடி வருமானம் என்றால் ₹30 லட்சம் வரி. Surcharge என்பது இந்த ₹30 லட்சத்துக்கு 10% அதாவது கூடுதல் ₹30,000 வரி.

30% கட்டுறவங்களே புலம்பிக்கொண்டு இருந்தால், அதையும் தாண்டி Surcharge கட்டுறவங்க நிலையை நினைத்துப்பாருங்க!

இவர்களுக்கு அரசாங்கம் என்ன சலுகை, முன்னுரிமை தருகிறது? இவர்கள் அரசுக்குச் சம்பாதித்து தரும் ஒரு இயந்திரம்.

எதிர்காலத்தில் எதோ காரணத்தால் வேலையை இழந்து, வருமானத்தை இழந்தால் அரசு எந்த வகையிலும் இவர்களைக் கண்டுகொள்ளாது.

பலாப்பழம் கதை தெரியுமா?

இதைப் பார்த்ததும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ராஜாக்கு பிடித்த பழத்தைக் கொடுத்தால், பரிசு. பிடிக்கவில்லையென்றால் கொண்டு வந்தவர் பின்னாடியே சொருகி விடுவார்கள்.

எலுமிச்சை பழத்திலிருந்து பலர் கொண்டு வந்து மாட்டிக்கொண்டார்கள். அண்ணாச்சி பழம் வைத்துள்ளவன் சிரித்துக்கொண்டே இருந்தானாம்.

ஏன்டா சிரிக்கிறே? என்று காவலர் கேட்டதுக்கு, நானாவது அண்ணாச்சி பழம் வைத்து இருக்கேன், பின்னாடி ஒருத்தன் பலாப்பழம் வைத்து இருக்கான்.

ராஜாக்கு பிடிக்கலைன்னா என்ன ஆகும்னு நினைத்தேன் என்றானாம்.

இதில் அண்ணாச்சி பழம் வைத்துள்ளவர் 30% வரி கட்டுபவர், பலாப்பழம் வைத்துள்ளவர் 30% வரியோடு Surcharge கட்டுபவர்.

இது தான் இன்றைய வரி நிலை.

கஷ்டப்பட்ட போது அரசாங்கம் எங்கே போனது?

இந்தச் சம்பளத்தை யாரும் எனக்கு அப்படியே தூக்கிக் கொடுத்து விடவில்லை.

விவேக்கிடம் நேரா 16 வது கேள்வியைக்கேளுங்கள் என்று மயில்சாமி கேட்பது போல, நேரா 30% வரி கட்டும் அளவுக்குச் சம்பாதித்து விடவில்லை.

சம்பளமாக ₹375 பேருந்து பாஸில் ஆரம்பித்து, ஒரு நாளைக்கு அதிகபட்சச் செலவே 50 ரூபாய்க்குள் (சாப்பாடு, பேருந்து) முடிக்க வேண்டிய நிலையிலிருந்து தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.

அப்போது நான் கஷ்டப்பட்ட போது அரசாங்கம் உதவவில்லை நண்பர்கள் தான் உதவினார்கள் ஆனால், கஷ்டப்பட்டு உயர்ந்த பிறகு 30% வரியைக் கொடு என்கிறது அரசாங்கம் ஆனால், அதே நண்பர்கள் திரும்பவும் உதவுகிறார்கள்.

வரியைக் கொடுக்க மாட்டேன் என்று கூறவில்லை (கூற முடியாது), கொடுக்கிறேன் ஆனால், என் எதிர்காலப் பாதுகாப்புக்கு அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும்.

இப்படித்தான் என்றில்லை, ஏதாவது ஒரு வகையில் செய்ய வேண்டும்.

பணம் இருப்பவன் கொடுக்கட்டும் என்ற எண்ணத்தை இயல்பாக அனைவர் தலையிலும் ஏற்றிவிட்டார்கள்.

அதனால் தான் அம்பானி ஜியோ கட்டணத்தை உயர்த்தினால், BSNL க்கு மாறாமல், அம்பானியை திட்டிக் கொண்டுள்ளார்கள்.

விமர்சனத்துக்குள்ளான பாஜக

வரி விமர்சனங்கள் பல காலமாக இருந்தாலும், இந்த முறை கூடுதல் தான்.

இதில் 30% வருமான வரி கட்டுபவர்களும் நடுத்தர வர்க்கத்தில் இணைந்து விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். தங்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லை என்பதால், இந்தப்பிரிவில் சேர்ந்து விட்டார்கள் போல.

உட்கட்டமைப்பை பலப்படுத்துகிறார்கள், மின்னணு பரிவர்த்தனையில் போலிகளை ஒழிக்கிறார்கள், நாட்டின் பொருளாதரத்தை வளர்க்கிறார்கள், வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளார்கள் என்பதை மறுக்கவில்லை.

ஆனால், கிடைக்கும் சேமிப்பில் மக்களுக்கு சுமையைக் குறைக்கவில்லை என்றால், முன்னரே கூறியபடி காங்கிரஸ் இதன் பலனை எதிர்காலத்தில் எடுத்துக்கொள்ளும்.

இறுதியாக, 30%+ வரி கட்டுபவர்களை பணம் எடுக்கும் இயந்திரமாக கருதாமல், எங்களின் உணர்வுகளுக்கும் அரசாங்கம் மதிப்பு கொடுக்க வேண்டும்.

கொசுறு

தற்போது New Regime ல் தான் தொடர்ந்து சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதன் இன்னொரு அர்த்தம், விரைவில் Old Regime மூடு விழா நடத்தப்படும் என்பது தான்.

2024 – 2025 க்கான நிதியாண்டில் New Regime க்கு மாறி விட்டேன். காரணம், இதில் தான் வரி ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

போலிக்கணக்கு காண்பித்து Old Regime ல் பணம் சேமிக்கலாம் (Refund), மிச்சப்படுத்தலாம் என்று இனி எண்ணாதீர்கள். அனைத்தையும் AI க்கு மாற்றி விட்டார்கள், வளைத்து வளைத்துப் பிடிக்கிறார்கள்.

தற்போது மாட்டவில்லையென்றாலும் பின்னர் நோட்டீஸ் வரலாம். New Regime ல் எந்த ஆதாரமும் (Rent receipt, Insurance.. etc) கொடுக்க வேண்டியதில்லை.

சிலருக்கு Old Regime ல் வரி குறைவாக இருக்கலாம். எனவே, இரண்டையும் ஒப்பிட்டு எது இலாபமோ அதில் தொடருங்கள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. என் ஆதங்கத்தை அப்படியே சொல்லி உள்ளீர்கள் .. இதில் நானும் மாட்டிக் கொண்டு புலம்பி வருகிறேன்…

    நாம் கட்டும் வரியானது 40% சதவீதத்திற்கும் மேல்..

    பொன் முட்டை விடும் வாத்தை அறுத்து பார்க்கிறார்கள்…

  2. கிரி.. இதுவரை என் பார்வையில் நீங்கள் எழுதிய பதிவுகளில் மிகவும் நேர்த்தியான பதிவாக நான் பார்க்கிறேன்.. காரணம் எல்லா தரவுகளையும் அவ்வளவு எளிமையாக, தெளிவாக எளிதில் புரியும் படி எழுதி உள்ளீர்கள்..

    நான் இங்கு இருப்பதால் எனக்கு வருமான வரி குறித்து சில தகவல்கள் துல்லியமாக தெரியவில்லை.. ஆனால் இந்த பதிவை படித்த பிறகு என் சில கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டது..

    கஷ்டப்பட்ட போது அரசாங்கம் எங்கே போனது? உங்கள் வலிகளை உணர்ந்து கொள்ள முடிகிறது..

  3. @சுரேஷ்

    நம்மைபோன்றவர்களின் நிலை இதுவே. புலம்பியே வாழ்க்கை போய்டும் போல 🙂 .

    @யாசின்

    “இதுவரை என் பார்வையில் நீங்கள் எழுதிய பதிவுகளில் மிகவும் நேர்த்தியான பதிவாக நான் பார்க்கிறேன்.. காரணம் எல்லா தரவுகளையும் அவ்வளவு எளிமையாக, தெளிவாக எளிதில் புரியும் படி எழுதி உள்ளீர்கள்”

    நன்றி யாசின். அவசரப்பட்டு எழுதக் கூடாது என்பதால், தரவுகளைச் சேர்த்து முழுமையையும் குறிப்பிட்டு எழுத வேண்டும் என்று எழுதினேன்.

    பலமுறை திருத்தப்பட்டு, விவரங்கள் சேர்க்கப்பட்ட பின்னரே இக்கட்டுரை வெளியானது.

    இக்கட்டுரையில் என் உழைப்பு அதிகம்.

    அதை உங்களைபோன்றவர்கள் அங்கீகரிக்கும் போது உழைப்புக்கு மதிப்பு கிடைக்கிறது.

  4. அடியேனும் திரு.யாசின் அவர்களின் கருத்துடன் உடன்படுகிறேன். இப்படியான தகவல்கள் தங்களின் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது. எனவேதான் தொடர்ந்து பயணிக்க முடிகிறது. நன்றி வணக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!